In Perambalur, Tamil Development Department’s Official Language Legislation Week : Perambalur Collector Information!


தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் கடந்த 1956 ல் இயற்றப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 2023–ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் 7 நாள்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரமாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 18–ஆம் நாள் முதல் 27–ஆம் நாள் வரையிலான 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி 18.12.2023 அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளைவிலிருந்து தொடங்கி பாலக்கரை சங்குபேட்டை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடையும். இப்பேரணியில் அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், பள்ளி / கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து 19.12.2023, 20.12.2023, 21.12.2023 ஆகிய மூன்று நாட்களும் முறையே அரசு பணியாளர்களுக்கான கணினித் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி, மொழி பெயர்ப்பும் கலைச் சொல்லாக்கமும் மற்றும் தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

22.12.2023–ஆம் நாள் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைத்திட வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளை கொண்டு கூட்டம் நடைபெறவுள்ளது. 26.12.2023–ஆம் நாள் ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.

ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் இறுதி நாளான 27.12.2023–ஆம் நாள் பொதுமக்கள் ஆட்சிமொழிச் சட்டத்தை அறியும் வகையில் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!