In Perambalur, the Collector, MLA initiated drainage cleaning and dredging works to avoid the northeast monsoon and disturbances.
வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை மற்றும் தூர்வாரும் பணிகள் நேற்று முதல் 6 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதையொட்டி, அதனை துவக்கி வைக்கும் விதமாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரோவர் ஆர்ச் பகுதியிலுள்ள கால்வாயினை தூய்மைபடுத்தும் பணியினை கலெக்டர் வெங்கட பிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்ததாவது:
தமிழகத்தில் துவங்க உள்ள வடகிழக்கு பருவ மழையினால் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகாத வகையிலும் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து விடாமலும் மேலும் அதிகப்படியாக தேங்கும் மழை நீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவாமல் தவிர்க்கும் வகையிலும் எதிர்வரும் பருவ மழையினால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையிலும் வரும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 100 சதவீதம் தூர்வாரி தூய்மைபடுத்தும் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ரோவர் ஆர்ச் பகுதியில் இப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் தூய்மைபடுத்தும் பணி நடைபெறவுள்ளது. பெரிய மழைநீர் வடிகால்களில் சேகரம் ஆகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் இயந்திரம், ஜேசிபி இயந்திரம் மற்றும் தேவைப்படும் இதர இயந்திரங்களை போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இயந்திரங்கள் இல்லாத உள்ளாட்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர சங்கங்கள் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் சிறிய மழைநீர் வடிகால்களில் உள்ள படிவுகளை அகற்றுவதற்கு உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். பணியாளர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அனிந்து பணிசெய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை முழுமையாக 6 நாட்களுக்குள் செயல்படுத்தி முடித்திட தேவையான வாகனங்கள், பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை அலுவலர்கள் ஆகியோர்களை வார்டு மற்றும் நாள் வாரியாக பொறுப்பு நிர்ணயம் செய்து உத்திரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால்கள் தூய்மைப்படுத்துவதையும், அகற்றுவதையும் கண்காணிக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் குன்னம் சி.ராஜேந்திரன், நகராட்சி ஆணையாளர் குமரிமன்னன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.