court-orderபெரம்பலூர் அருகே விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும் என வாகன விற்பனை நிலையம், நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவர் பெரம்பலூர் நான்குரோடு சந்திப்பு அருகே உள்ள இலகுரக வாகனங்கள் விற்பனை நிலையத்தில் ஷேர் ஆட்டோ வாங்குவதற்கு அணுகினார். அந்நிறுவனம் திருச்சியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தாரிடம் பரிந்துரை செய்தது.

கலையரசன் மாத தவணை முறையில் வாகனத்திற்கான பணம் செலுத்தும் ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டிருந்தார். மேலும் ஷேர் ஆட்டோவிற்கான முன்பணமும், 2 மாதத்திற்கான தவணை தொகை ரூ.7800 வீதம் ரூ.15600-ம் வாகன பதிவிற்கான செலவுத்தொகை ரூ.3 ஆயிரமும் செலுத்தியிருந்தார்.

ஆனால் ஷேர் ஆட்டோவை உரிய நேரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவு செய்து, வாகனத்தை கலையரசனிடம் கொடுக்க வாகன விற்பனை நிலையம் முன் வரவில்லை. எனவே கலையரசன் தான்கட்டிய முன்பணம் மற்றும் தவணைத்தொகை, வாகனபதிவிற்கான செலவுத்தொகையை திரும்பி அளிக்குமாறு வாகன விற்பனை நிலைய உரிமையாளரிடம் முறையிட்டார்.

கலையரசனுக்கு, அவர் செலுத்திய முன்பணம் திரும்பி தரப்பட்டது. ஆனால் அவர் செலுத்திய 2 மாத தவணை மற்றும் வாகன பதிவிற்கான செலவுத்தொகையை அந்நிறுவனம் திரும்பி தரவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட கலையரசன் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.

வழக்கு நிறைவில் வாகன விற்பனை நிலையத்தின் சேவைக்குறைபாடு காரணமாக மனுதாரர் கலையரசனுக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டுத்தொகையும், ரூ.5ஆயிரம் வழக்கு செலவுத்தொகையும் வழங்குமாறு வாகன விற்பனை நிலையம் மற்றும் தனியார் நிதிநிறுவனத்திற்கு உத்திரவிட்டது.

மேலும் கலையரசன் செலுத்திய 2 மாத தவணைத்தொகை ரூ.15600 மற்றும் வாகன பதிவிற்கான செலவுத்தொகை ரூ.3000-ஐ 2 மாதத்திற்குள் 12 சதவீத வட்டியுடன் திரும்பி தரவேண்டும். என்று அந்த உத்திரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!