In Perambalur, Voter List Special Awareness Rally

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2020-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்ள அறிவித்துள்ளது. அதன்படி தகுதியுள்ள நபர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நோக்கத்துடன் பெரம்பலூர் மாவட்டத்தில் ஜன.4, 5. மற்றும் 11 ஆகிய தினங்களில் பெரம்பலூர் மாவட்டத்திலலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி வாக்காளராக பதிவு செய்ய 18 வயது நிறைவுபெற்ற அனைவரும் அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து முகவரி மற்றும் வயதுசான்றுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்து தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். எனவே 18 வயது நிறைவடைந்த அனைவரும் இம்முகாமை பயன்படுத்தி தங்களது பெயரை பதிவு செய்து இந்திய வாக்காளராக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட வேண்டும்.

மேலும் இச்சிறப்பு முகாம்கள் குறித்தும், வாக்காளராக பதிவு செய்வதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணியை நேற்று பெரம்பலூரில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி, பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை, புதிய பேருந்து நிலையம் வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதன் அவசியம் குறித்தும், வலுவான ஜனநாயகத்திற்கு “வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்காளிக்க தயார் என்போம்”, “18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவர்”, “மனதில் உறுதி வேண்டும், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் நகரை வலம் வந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய 23.12.2019 முதல் 22.01.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் 04,05,11 மற்றும் 12.01.2020 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெற்றுவருகின்றன.


வாக்காளர் உதவி மையம் 1950 (மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்) கைபேசி செயலி (Voter Helpline App) தேசிய வாக்காளர் இணையதள சேவை www.nvsp.in பொதுசேவை மையம் (CSC) இதன் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், பெயர் நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொண்டு, வலுவான ஜனநாயகம் அமைய நாம் அனைவரும் பாடுபாடவேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சுப்பையா, வட்டாட்சியர் பாரதிவளவன் உள்பட கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!