பெரம்பலூர் : வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிக்கும் முறைகள் குறித்தும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி முன்னிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக மாவட்டதிலுள்ள பல்வேறு கல்லூரிகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச்சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விதங்களில் வாக்காளர்களுக்கு வாக்களித்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்தி வருகின்றனர்.
மேலும், உங்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குப்பதிவை முழுவதுமாக செலுத்தும் பட்சத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற தேர்தல் ஆணையத்தின் கனவு மெய்ப்படும்.
ஆகவே மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
மேலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக சாய்வுதள வசதிகொண்ட படிகட்டுகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஏற்ப்படுத்தப்படும்.
எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும், என பேசினார்.
அதனை தொடர்ந்து தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மாற்றுத்திறனாளிகளிடம் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும், வாக்களிக்கச்செல்லும் முன் வாக்காளர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை குறித்தும் செயல் விளக்கங்கள் மண்டல அலுவலர்களால் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்னர்.