In Tamil Nadu, Perambalur district has given the most crop loans; Minister Sivashankar information!

பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் 70வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை கலெக்டர் க.கற்பகம் தலைமையில் நேற்று வழங்கினார்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண திட்டத்தினை அறிவித்து இதுவரை இத்திட்டத்தின் கீழ் 375 கோடி பயணங்கள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயணம் செய்து தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுப்படாத ஒப்பற்ற திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். கிராமப்புறங்களில் வசித்து வரும் விவசாய பெருமக்கள் காலையிலேயே வேலைக்கு சென்று விடுவதால் அவர்களது குழந்தைகள் காலை உணவை சரிவர சாப்பிட முடியவில்லை என்பதை அறிந்து, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், காலை உணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் சத்துமிக்க காலை உணவை சாப்பிட்டு கல்வியை பெறுகிறார்கள். இந்தத் திட்டத்திற்காக வழங்கப்படும் பொருட்கள் கூட்டுறவுத் துறை மூலம் விநியோகிக்கப்படுவதால் இத்திட்டம் கூட்டுறவுத் துறைக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டியில்லாப் பயிர்க்கடன் நவம்பர் 15 -ஆம் தேதி முடிய ரூ.245.08 கோடி 29,524 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நடப்பாண்டில் அக்டோபர் 2023 முடிய 41,405 விவசாயிகளுக்கு ரூ.30.22 கோடி மதிப்புள்ள 12975.366 டன் உர விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயிர் கடன், டாம்கோ, டாப்செட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கியதில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது.

முதலமைச்சர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சுய உதவிக்குழுக்களின் 25,971 உறுப்பினர்களின் ரூ.52.72 கோடி அளவிலான சுய உதவிக்குழுக்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

விவசாயிகள் தாங்கள் பெற்ற கடன் மூலம் பொருளாதாரத்தில் வலுவடைந்து கடனைச் செலுத்த ஏதுவாக மத்திய காலக் கடன்கள் 552 நபர்களுக்கு ரூ.4.24 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நகைக்கடன் நவம்பர் 15 -ஆம் தேதி முடிய 18,884 நபர்களுக்கு ரூ.117.74 கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடப்பாண்டில் நவம்பர் 15 -ஆம் தேதி முடிய 690 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 8725 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.67.12 கோடி கடனாக வழங்கப்பட்டு, குழு உறுப்பினர்களுக்கு குடும்பங்கள் முன்னேற்றம் அடைந்து குடும்பப் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வருகின்றன.

பிற்படுத்தப்பட்டோரை மேம்படுத்தும் வண்ணம் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் 633 நபர்களுக்கு ரூ.369.50 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை மேம்படுத்தும் பொருட்டு டாம்கோ திட்டத்தின் கீழ் 47 நபர்களுக்கு ரூ.29.50 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி ஏழை எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எண்ணிலடங்கா திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திவருகின்றார் என பேசினார்.

பின்னர் கூட்டுறவுத்துறையின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கடன், கறவை மாடு கடன் என பல்வேறு திட்டங்களின் மூலம் 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட அளவில் சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், அனைத்து வகை கடன்களையும் தவணை தவறாமல் 100% முழுமையாக வசூல் செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், அதிக அளவில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், அதிக அளவில் பயிர்கடன் வழங்கிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், அதிக அளவில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மரு.கருணாநிதி கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!