பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை கவருவதற்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் நூதன பிரச்சாரம் இன்று செய்தார்.
வரும் மே.16 ம் தேதி, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வாக்காளர்களை கவருவதற்காக வீதி, வீதியாக நடந்தும், இருசக்கர வாகனங்களில் சென்றும், மேளம், ட்ரம்செட் வாத்தியங்களை இசைத்தும், நடனமாடியும், பிரச்சார வாகனங்களில் கீற்று கொட்டகை அமைத்தும். தேனீர், உணவகங்களில் மக்களளோடு மக்களாக அமர்ந்து உணவு பொருட்களை சாப்பிடுவது என பல்வேறு யுத்திகளை கையாண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான ப.அருள் இன்று குன்னம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவாய் கிராமத்தில், சாரால் மழையில் நனைந்து கொண்டே தன்னுடைய எளிமையை வெளிப்டுத்துவதற்காகவும், விவசாயி வீட்டு பிள்ளை என்பதை தெரிவிக்கும் விதமாக வீதி, வீதியாக மாட்டு வண்டியில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.
அ.தி.மு.க., தி.மு.க, பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் மாட்டு வண்டி பிரச்சார யுக்தி மற்ற வேட்பாளர்களிலிருந்து அவரை வேறுபடுத்தி காட்டியது.