Inaugurated the construction of a new classroom at Perambalur Century under the Prof. Anbazagan School Development Scheme in the presence of the Collector, MLA.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் ரூ.784 கோடி மதிப்பீட்டில் 5,351 புதிய பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் தொடங்கி வைத்தார்.
இதனை,பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காணொளி காட்சி மூலம் மாணவ,மாணவிகளுடன் அமர்ந்து கலெக்டர் வெங்கடபிரியா எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, அவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்திட “இல்லம் தேடி கல்வி”, “எண்ணும் எழுத்தும்”, “நம் பள்ளி நம் பெருமை” போன்ற திட்டங்களை செயல்படுத்துதல், அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்”, காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி கல்வி கற்க 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதுடன், ஊரகப் பகுதிகளில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக அமைத்து பராமரித்து வருகின்றது.
கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கும், மாணவர் வருகையை அதிகரிப்பதற்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கும் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும். இதனை கருத்தில் கொண்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகள் நடப்பாண்டில் கட்டப்படும் என்றும், பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து தற்போது 115 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 19.10.2022 அன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 2,72,857 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2,462 பள்ளிக் கட்டடங்கள் 5,351 குழந்தை நேய அம்சங்களுடன் கூடிய புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் தலா ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கட்டுமான பணிக்கு கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், பெரம்பலூர்யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி பிரியதர்ஷினி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் செல்வகுமார், அறிவழகன், செஞ்சேரி ஊராட்சி தலைவர் கல்பனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.