Incentive to Private Hospitals Cooperating TB: Perambalur Collector
பெரம்பலூரில் காசநோய் தடுப்புத் திட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தினர், தனியார் மருத்துவ நிர்வாகித்தினர், மருந்தாளுநர் சங்கம், ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தினருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது பெரம்பலூர் மாவட்டத்திலும் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க, காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க தனியார் மருத்துவர்கள், ஆய்வகத்தினர், மருந்தாளுநர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
காசநோய் பரிசோதனை செய்து நோயாளருக்கு காசநோய் இருப்பது கண்டறிந்தால் உடனே சுகாதாரத்துறை இணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நபருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவரை பரிந்துரை செய்து அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பிவைக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை மையம் மற்றும் மருந்தாளுநர் போன்றோருக்கு அரசு ரூ.500.00 ஊக்கத் தொகையினை அரசால் வழங்கப்படுகிறது. மேலும், காசநோய் பாதித்தவர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.500 உதவி தொகை வழங்குகிறது.
அதுமட்டுமல்லாது, அரசு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த தகவல்களையும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
காசநோயாளிகள் இருந்தும் அவர்கள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். காசநோயினை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும் ஒத்துழைக்கவேண்டும், என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட இணை இயக்குநர் சசிகலா, துணை இயக்குநர் (பொது) சம்பத், துணை இயக்குநர் (பொறுப்பு) (காசநோய்) சுரேஷ், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருந்தாளுநர்கள், இந்திய மருத்துவ சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.