Income tax exemption limit should be raised to Rs.5 lakh! Ramadas, founder of PMK

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

ஜி.எஸ்.டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படும் என அனைத்துத் தரப்பினரும் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி விகிதம் இப்போதுள்ள அளவிலேயே நீடிக்கும்; அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று ஜி.எஸ்.டி குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது அனைவருக்கும் மன நிறைவளிக்கும் முடிவு ஆகும்.

ஜி.எஸ்.டி வரி வருவாய் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருவதாலும், மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அதை சமாளிக்க ஜி.எஸ்.டி வரி விகிதங்களை இப்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்குகளுக்கு மாற்றாக 8%, 18%, 28% என்ற மூன்று அடுக்குகளாக குறைக்கவும், அதற்கேற்ற வகையில் வரி விகிதங்களை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அவ்வாறு செய்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அதனால் ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் கடந்த 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதையேற்று ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்படாது என்று ஜி.எஸ்.டி குழு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

அதேநேரத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மக்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பரிசீலிக்கக்கூட முன்வராதது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் நரேந்திரமோடி அரசு பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது மாத வருவாய் பிரிவினருக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளிலாவது வருமானவரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று வருமானவரி செலுத்தும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை.

வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்பு ஆகும். ஏனெனில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2.5 லட்சத்திற்கு இருந்த மதிப்பும், இப்போதுள்ள மதிப்பும் ஒன்றல்ல. 5 ஆண்டுகளில் பணவீக்கம் சுமார் 50 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கிறது. அரசு பணிகளிலும், அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றுவோருக்கு கிட்டத்தட்ட அதே அளவுக்கு ஊதியமும் அதிகரிக்கிறது. ஊதிய உயர்வுக்கு இணையாக குடும்ப செலவுகளும் அதிகரிக்கின்றன. ஆனால், வருமானவரி விலக்கு வரம்பு உச்சவரம்பு மட்டும் உயர்த்தப்படாமல் இருந்தால் அது ஊதியதாரர்களுக்கு பாதிப்பையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

வருமானவரி விலக்கு வருவாய் உச்சவரம்பு உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக ஏமாற்றங்களாக முடிந்து விட்ட நிலையில், வரும் ஆண்டிலாவது அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். வருமானவரி விலக்கு உச்சவரம்பு இப்போது ரூ.2.50 லட்சமாக இருக்கும் நிலையில், அது குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். அதேபோல், வருமானவரி விகிதமும் அடுத்தத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட வேண்டும். உதாரணமாக இப்போது 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை 5% வரி வசூலிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப் பட்டால், அதன்பின் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டிலிருந்து 10% ஆக குறைக்க அரசு முன்வர வேண்டும். அதன்பிறகு ரூ.20 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% ஆகவும், ரூ.2 கோடி வரையிலான வருமானத்திற்கு 30% ஆகவும், அதற்கு மேல் 35 விழுக்காடாகவும் நிர்ணயிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

வருமானவரி தவிர, கல்வி, சுகாதாரம், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டு 5 ஆண்டுகளும், அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டும் ஆகும் நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!