Indefinite strike from December 4; Announcement of Jactto-Geo
வரும் டிசம்பர். 4ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய தொடர் பிரசாரம், இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ சார்பில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்கள், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும் 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வரும் டிச. 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
போராட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டுதொடர் பிரச்சாரம், இயக்க நடவடிக்கை மேற்கொள்வது. அதன்படி வரும் 25ம் தேதி மாவட்டத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, 26 முதல் 30ம் தேதி வரை வேலைநிறுத்தப் பிரச்சார இயக்கம் செய்வது, 30ம் தேதி மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, 29, 30ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒருங்கிணைப் பாளர்கள் செல்வக்குமார், ஜெகதீசன், உயர்நிலைக்குழு உறுப்பினர் ராமு, சங்க பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.