Indian Army’s Jeyabarat Mega balloon adventure in Perambalur
இந்திய ராணுவத்தில் பயிற்சி பெறும் இராணுவ வீரர்களால் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, ஜெய்பாரத் எனும் ராட்சச பலூனில் பறந்து செல்லும் நிகழ்ச்சி இன்று பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த சாகச பயணமானது கடந்த நவம்பர் 6ம் தேதி ஜம்முவில் துவங்கி இந்தியா முழுவதும் உள்ள 31 முக்கிய நகரங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக மேற்படி இராணுவ வீரர்களின் இராட்சச பலூனில் பெரம்பலூர் வந்து செல்லும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து இந்திய இராணுவத்தின் ஜெய்பாரத் ராட்சச பலூன் சாகச நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
ஆனால், இன்று காற்றின் வேகம் சுமார் மணிக்கு 16 கி.மீ வீசியதால் , பலூனை நிலை நிறுத்தவும், பறக்க விடவும், சிரமப்பட்ட ராணுவ வீரர்கள் ஒரு வழியாக மாணவர்களுக்காக சிரத்தை எடுத்து சிறிது நேரம் ஹீலியம் வாயுவை நிரப்பி பறக்க விட்டு காண்பித்தனர். இதனால் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாளை காலை சுமார் 6 மணி அளவில் திருச்சி நோக்கி பலூனில் பறக்க உள்ளனர். முன்னதாக இன்று காலை சுமார் 11 மணியளவில், விழுப்புரத்தில் இருந்து பெரம்பலூருக்கு வந்தடைந்தனர்.
இந்த பலூன் பறக்கும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக ராணுவத்தில் இளைஞர்கள் இணைய ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், ஒரே இந்தியா என்பதை வலியுறுத்தியும், இந்த சாகச நிகழ்ச்சி நடத்துவதாகவும் கர்னல் விவேக் அலபத் தெரிவித்தார்.