Infectious Disease Awareness Camp on behalf of Legal Aid Commission in Veppanthattai

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். சுபாதேவி வழிகாட்டுதலில், வேப்பந்தட்டை வட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற பணியாளர்களுக்கு கொரோனா நோய் தடுப்பிற்காக கபசுர குடிநீர் வழங்குதல், நோய் தொற்று பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான ஜி.கருணாநிதி தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம். வினோதா, நீதித்துறை நடுவர் டி. செந்தில்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம். வினோதா அரசு மற்றும் மருத்துவர்கள் நமக்கு வழங்கியுள்ள அறிவுறைகளை பின்பற்றியும் உணவு முறையை சரியான முறையில் கடைபிடித்தும் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் பாதுகாத்திட பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இம்முகாமில் சித்த மருத்துவர் விஜயன், ஓமியோபதி மருத்துவர் ராகுல்ஜி, யோகா மற்றும் இயற்கை மருத்துவர் கலைவாணி ஆகியோர் சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் கபசுர குடிநீரின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் ஜி.கருணாநிதி நீதிமன்ற பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்திட முகக்கவசம் அணிவதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். முகாமில் பணியாளர்களின் அனைவருக்கும் கபசுர குடிநீர் மருந்து, இயற்கை நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சமூக சட்ட ஆர்வலர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!