Inspection and Review the Collector in in Namakkal Panchayat Union Development Projects
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வசந்தபுரம், வகுரம்பட்டி, மரூர்ப்பட்டி, சிலுவம்பட்டி, மாராப்பநாயக்கன்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் நடைபெற்று வரும் ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் பஞ்சாயத்து குப்பம்பாளையம் பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் பூங்கொடி தங்கவேல் என்பவரின் வீட்டினை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் அங்கம்மாள் ராமசாமி என்பரின் வீட்டினை பர்வையிட்டார். தாண்டாக்கவுண்டனூர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வகுரம்பட்டி ஊராட்சி பொன்விழா நகர் பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சிக்கூடம் மற்றும் ரூ.20.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா பூங்கா ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
சின்ன ஏரி பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணியினையும், சிலுவம்பட்டி ஊராட்சியில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், மாரப்பன்நாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் நொச்சி மரக்கன்றுகள் தயாரிக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி, நாமக்கல் ஊராட்சி பிடிஓக்கள் செல்வராஜன், அருள்திருமாறன், உதவி பொறியாளர் நைனாமலைராஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.