Jal Shakti Abhiyan Project: Works at a cost of Rs.62.57 lakh in Perambalur District; Central Joint Secretary GN Singh information!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பணிகள் குறித்து ஒன்றிய கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணைச்செயலாளர் ஜி.என்.சிங் தலைமையில் நீர் மேலாண்மை திட்ட செயற்பொறியாளர் டாக்டர். கஜன் கார்க் மற்றும் அபிசேக் கவ்ரவ் அடங்கிய குழு ஆய்வு செய்தது.
ஆய்வுக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நீர் மேலாண்மை குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் கடந்த 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் உள்ள மழைநீர் சேகரிப்பு நீர் ஆதார பணிகளான கழிவு நீர் குட்டைகள், பண்ணை குட்டைகள், மேற்கூறையில் மழைநீர் சேகரிப்பு கூடம், அம்ரித் சரோவர் குளம் மற்றும் தடுப்பணைகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், ஆலத்தூர் ஒன்றியத்தில் ரூ.39.96 லட்சத்தில் 7 பணிகளும், பெரம்பலூர் ஒன்றியத்தில் ரூ.15.61 லட்சத்தில் 3 பணிகளும் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ.7 லட்சத்தில் ஒரு பணியும் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருதையாறு வடிநில கோட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளது. நீர்மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும், என தெரிவித்தார்.
பின்னர் கலெக்டர் வெங்கடபிரியாவை சந்தித்து மாவட்டத்தில் நடைபெற்று முடிவுற்ற பணிகள் குறித்தும் மற்றும் அடுத்து இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடினர். அப்போது, நீர்வளத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.