Jallikattu; Govt. Should act as per rules – Perambalur Collector V. Santha
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். இது போன்ற ஜல்லிக்கட்டு விழாவினை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவது தொடர்பான மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு செய்திட கலெக்டர் தலைமையின் கீழ் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வே.சாந்தா தலைமையில் இன்று குழு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் கலெக்டர் பேசியதாவது:
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வோர் தங்கள் பகுதியின் வருவாய்த்துறை வட்டாட்சியரிடம் தங்களது பெயரினை பதிவு செய்யவேண்டும். மேலும், அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தும் அமைப்பாளர்கள் மீது காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து (FIR) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களின் முழு உடற்தகுதி சான்று மருத்துவத்துறையினரால் வழங்கப்பட்ட பின்னரே, போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்படவில்லை என்று கால்நடைத்துறையினரால் சான்றளிக்கப்பட வேண்டும். மேலும், அந்த மாடுகள் போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்பதனை பரிசோதித்து கால்நடை மருத்துவர் சான்றளிக்கவேண்டும். காளைக்கு ஏதேனும் நோய்கள் அல்லது காயங்கள் இருப்பதை கண்டறியப்பட்டால் அந்த காளைகளை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் களத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு 20 நிமிடங்கள் ஓய்வளிக்கப்படவேண்டும்.
காளைகள் நிறுத்தப்படும் இடத்தில் 60 சதுர அடி அளவில் போதிய இடைவெளி அளிப்பதுடன், பாதுகாப்பாக உணர காளையின் உரிமையாளர் அருகில் இருக்க வேண்டும். அதோடு, மழை, வெயில் பாதிக்காமல் இருக்க கூடாரம் அமைத்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, நிகழ்வுகள் கண்காணித்து பதிவு செய்யப்படவேண்டும்.
பார்வையார்களும், சுற்றுப்புறத்தாரும் பாதிக்கப்படாத வகையில் இரட்டை தடுப்பு வேலி 8 மீ அடி உயரத்துடனும் காளைகள் துள்ளிக்குதிக்கும் போது அதன் ஊடே கொம்புகள் மாட்டிக்கொள்ளா வகையில் நெறுக்கமாக பெரிய ஓட்டைகளாக இல்லாமல் வேலி அமைக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். பார்வையார்கள் அமர்ந்து பார்க்கும் கேலரி ஆகியவற்றை பரிசோதித்து அதன் உறதித்தன்மைக்கான சான்று பொதுப்பணித்துறையினரால் வழங்கப்படவேண்டும்.
காளையை அடக்குவோர் 15 மீட்டர் தூரத்திற்கு திமிலை மட்டுமே பிடித்துக்கொண்டு செல்லவேண்டும். வால் மற்றும் காது போன்றவற்றைப் பிடிக்கக்கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் பட்சத்தில், உடனடி சிகிச்சை அளிக்கும் பொருட்டும். மருத்துவர்களும், ஆம்புலன்சும் தயார் நிலையில் இருக்கவேண்டும். போட்டியில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு தனியே குறிப்பிட்ட வண்ணத்தில் சீருடை வழங்கப்பட வேண்டும். எவ்வளவு எண்ணிக்கையில் பார்வையாளர்கள் உட்கார்ந்து பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட வேண்டும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் முறையாக செய்திட வேண்டும்.
எனவே, ஜல்லிக்கட்டு விழா நடத்த விரும்பும் விழாக் குழுவினர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், தங்கள் பகுதிக்கு வருவாய்த்துறையினர், காவல்துறையினர், கால்நடை பராமரிப்புத்துறையினர், தீயணைப்புத்துறையினர் என அரசு அலுவலர்களை உள்ளடக்கிய ஆய்வுக்குழுவினர் சம்மந்தப்பட்ட இடத்தை முழுமையாக ஆய்வு செய்து, அரசு விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். எனவே, ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் எஸ்.பி. நிஷா , டி.ஆர்.ஓ. ராஜேந்திரன், ஆர்.டி.ஓ சுப்பையா, போலீஸ் டி.எஸ்.பி.கென்னடி, கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் மரு.மதனகோபால், உதவி இயக்குநர்கள் மகாலிங்கம் (ஊராட்சிகள்) , மரு.மும்மூர்த்தி (கால்நடை பராமரிப்புத்துறை) , மரு.குணசேகரன் (கால்நடை நோய் புலனாய்வு பிரிவு), உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.