Jallikattu in Thondamanthurai: Review meeting headed by Collector of Perambalur regarding progress works

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில் 12.04.02023 அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் விழா அமைப்பாளர்கள் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் ஜல்லிக்கட்டு விழாவினை காப்பீடு செய்திருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள உள்ள காளைகளின் எண்ணிக்கையுடன், விழாவில் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் காளைகளின் பட்டியல்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட வேண்டும். காளைகள் அழைத்து வரும் பகுதியில் இருந்து, வாடிவாசல் வரை நிழல் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். காளைகள் போட்டியில் பங்கேற்று சேகரமாகும் இடம் (Bull Collection Yard) வரை சென்று, திரும்பவும் காளைகள் வாடிவாசல் நோக்கி ஓடிவராமல் தடுக்க கதவு போன்ற அமைப்புடன் கூடிய கட்டமைப்பு வசதிகள் செய்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் பொதுமக்கள் வசிக்கும் இடத்திலிருந்து தொலைவில் இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் சேகரமாகும் இடத்தில் காளைகள் இளைப்பாற வசதியாக – நிழல் பந்தல், தீவனங்கள் மற்றும் அகலமான தொட்டியில் போதிய அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்கவேண்டும். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தினரால் அடையாள அட்டை (ID card) வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.

அவசர காலங்களில் காளைகள் மற்றும் பங்கேற்பாளர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பிடும் வகையில் அவசர வழியினை (Emergency Exit) விழா திடலில் அமைக்கப்படவேண்டும். விழா திடலினை (Bull run arena) மென்மைபடுத்த தேங்காய் நார் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 50 சதுர மீட்டர் பரப்பளவும் 15 சென்டி மீட்டர் உயரமும் இருத்தல் வேண்டும். வீரர்கள் காளைகளின் திமிலை (Hump) தழுவியபடி 15 மீட்டர் செல்லவோ, 30 வினாடிகள் தழுவியபடி செல்லவோ அல்லது காளைகளின் 3 துள்ளல்களை கட்டுப்படுத்தி தழுவியபடி சென்றால் வீரர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

விழா அமைப்பினர் ஜல்லிக்கட்டு நிகழ்வினை திறந்தவெளியில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் உள்ள கிணறுகள் முறையான வகையில் மூடப்பட்டிருக்க வேண்டும், சுற்றி பாதுகாப்பு தடுப்பு கட்டைகள் அமைக்கப்படவேண்டும்.

ஜல்லிக்கட்டு விழாவினை பாதுகாப்பாகவும், அரசு விதிகளுக்குட்பட்டும் நடத்துவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நல்ல முறையில் நடைபெற விழாக்குழுவினர் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். தன்னார்வலர்கள் போதிய எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். எனவே, ஜல்லிக்கட்டு விழா நடத்தும் விழாக் குழுவினர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு வகுத்துள்ள விதிகளை முறையாக பின்பற்றி, ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு குழுத்தலைவர்கள் காளைகளுக்கும் பார்வையாளர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கி முழு பொறுப்பேற்று எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பாக நடத்திட வேண்டும், என பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய், , காவல், ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!