Jallikattu in Visuvakudi village; 37 injured; 440 bulls, 256 Youngers participating!
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், விழா நடைபெறுவதற்கு முதல்நாள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படாததால் அன்று ஜல்லிக்கட்டு நடத்தவில்லை. தொடர்ந்து விழாக் குழுவினர்கள் சாலை மறியல் போராட்டம், முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து முறையான அனுமதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு இன்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 440 ஜல்லிக்கட்டு காளைகள் விழாவில் கலந்து கொண்டது.
256 வீரர்கள் களத்தில் இறங்கி மாடுகளை பிடித்தனர். முன்னதாக காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை கால்நடை மருத்துவர்களால் செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதிக்கான மருத்துவ சான்றிதழ்களும், கொரோனா பரிசோதனை சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
வாடிவாசலில் இருந்து காளைகள் அலங்கரிக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மாடுபிடி வீரர்களை உற்சாக படுத்தினார்கள். தொடர்ந்து பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 14 மாடுபிடி வீரர்கள் உள்பட 37 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை விசுவக்குடி ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விழாக் குழுவினர்கள் செய்திருந்தார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை அரும்பாவூர் போலீசார் செய்திருந்தனர்.