Jallikattu near Namakkal; At 400 bulls, one fell into the well and the death of a pity: 34 injured

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 400காளைகள் பங்கேற்றன. இதில் காளைகள் முட்டி தூக்கி வீசியெறிந்ததால் 34 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பொட்டிரெட்டிப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. சேலம், நாமக்கல், திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டுக் காளைகள் கொண்டுவரப்பட்டன.
மொத்தம் 400 காளைகள் அழைத்து வரப்பட்டது. அவற்றை கால்நடை மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுபோல்,காளைகளை பிடிக்க சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 220 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களும் மருத்துவ பரிசோதனைக்குப் பின் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தலா 120 பேர் வீதம் இரண்டு குழுவாக மாடுபிடி வீர்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து காளை உரிமையாளர்கள் பெயர், ஊர் மற்றும் காளைகளுக்கு வைக்கப்பட்ட விருமாண்டி, சொரிமுத்து,பேட்ட, பில்லா போன்ற செல்லப் பெயர்களை படித்தபடி காளைகள் ஒவ்வொன்றாக வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, அங்கு சூழ்ந்திருந்த காளையர் கூட்டம் தாவிப்பிடித்து அடக்க முற்பட்டனர். சில காளைகள் வீர்களின் பிடியில் சிக்கியது.
சில காளைகள் மிரட்டலாக மெதுவாக நடந்தும், பிடிக்க வந்த காளையர்களை தூக்கி வீசி பந்தாடி பார்வையாளர்களை மிரளச் செய்தது. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு காளைகளின் உரிமையாளர்கள் சார்பில் கட்டில்,மெத்தை, சைக்கிள், வெள்ளி அரைஞான் கயிறு, தங்கச் காசு,ரொக்கம் உள்ளிட்ட பரிசுகளும், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கு, விழாக்குழுவினர் சார்பில் அதன் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே ஜல்லிக்கட்டு மைதானத்தில் காளைகள் முட்டி வீசியெறிந்ததில் பொட்டிரெட்டிப்பட்டயைச் சேர்ந்த மதன்(22), ஆகாஷ் (24), நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (27), நவீன் (25)உள்பட 34 காயமடைந்தனர்.அவர்களுக்கு அங்குள்ள மருத்துவக் குழுவினர் முதலுவி செய்தனர். இதில் படுகாயமடைந்த லோகேஷ் (24) என்பவர் உள்பட 5 பேர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்பட்டுள்ளனர்.
முன்னதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் வெ. சரோஜா ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.போட்டி நடைபெறும் இடத்தில் வீரர்கள்,காளைகள் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாத வகையில் தேங்காய் நார் கொட்டப்பட்டிருந்தன. மேலும்,பார்வையாளர்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் நுழைய முடியாதபடி விழாக்குழுவினர் தடுப்புகள் அமைத்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம்,காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர் மேலும், சேலம், நாமக்கல் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு ரசித்தனர். அசம்பாவிதம் தவிர்க்க நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் ஏராளான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கிணற்றில் விழுந்து காளை உயிரிழப்பு
ராசிபுரரம் தாலுக்காவிற்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை அருகே மங்களபுரத்தைச் சேர்ந்த எம். சக்திவேல் என்பவர் தனது காளையுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொண்டார். வாடிவாசல் வழியாக திறந்தவிடப்பட்ட அவரது காளை, போட்டி நடைபெறும் மைதானத்தைக் கடந்த ஓடியபோது அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது.
அந்தக் காளை தீயணைப்புத் துறையினர் மீட்பு நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எனினும், அந்தக் காளை மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தது. காளைகள் முட்டிக் காயமடைந்தவரகளில் 27 பேர் பார்வையாளர்கள், 7 பேர் மாடுபிடி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.