Jawaharlal Nehru Birthday Speech Competitions for School and College Students: Perambalur Collector Info!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022- ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 14.11-2022 (திங்கட்கிழமை) அன்று, பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்கள் காலை 09.00 மணியளவில் அவர்களின் வருகையை பதிவு செய்து உறுதி செய்திட வேண்டும். போட்டி காலை 10.00 மணியளவில் தொடங்கப்படும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கப்படும் எனவும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் ஒரு கல்லூரிக்கு இருவர் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ / மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிக்கு இருவர் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- என்ற வகையில் வழங்க பெற உள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத் தொகை ரூ.2,000/- வீதம் வழங்கப் பெறவும் உள்ளது. இதே போல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- என்ற வகையில் வழங்க பெற உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தின விழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய 6 தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேரு கட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, அமைதிப் புறா – நேரு ஆகிய 6 தலைப்புகளிலும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கு பெற்று மாணவர்கள் பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.