நாடெங்கிலும் நடைபெற்று வந்த நகைக் கடை வியாபாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து இன்று முதல் நகைக் கடைகள் செயல்பட உள்ளன.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டது. இதனை திரும்பப் பெறக்கோரி இந்தியா முழுவதும் தங்க நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக டெல்லியில் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஸ்ரீதர் நேற்று இரவு தெரிவித்தார்.
கலால் வரியை ரத்து செய்வது தொடர்பான நகை வியாபாரிகளின் கோரிக்கையை ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளதை ஏற்று கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகக் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் கடைகள் அனைத்தும் திறக்கப்படும்’ என்றும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம் நகைக் கடைகளும் இன்றுமுதல் வழக்கம்போல் இயங்கும்’ என்று சென்னை நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் சல்லானியும் தெரிவித்துள்ளார்.