Karthigai Deepa Festival; Maha Deepam lit at Brahmarishi Hill near Perambalur. Thousands attended.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் பிரம்ம்மரிஷி மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 40 வது ஆண்டாக நேற்று கார்த்திகை தீபதிருநாள் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

விழாவை யொட்டி நேற்று காலை கோமாதா பூஜையும், கஜ, அஸ்வ பூஜையும் நடந்தது. தொடர்ந்து பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வர் கோயிலில் மகா தீபசெப்பு கொப்பரை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு எளம்பலூர் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் பூஜை செய்து பின்னர் பிரம்மரிஷி மலைக்கு எடுத்து வரப்பட்டது.

மாலை 6 மணியளவில் பிரம்மரிஷி மலை உச்சியில் 5 அடி உயர செப்பு கொப்பரையில், 2 ஆயிரத்து 100 மீட்டர் திரி கொண்டு, ஆயிரத்து 8 லிட்டர் பசு நெய், செக்கு நல்லெண்ணை ஆகிய 5 வகையான கலவை எண்ணைகளுடன், 108 கிலோ கற்பூரம் கொண்டு வானவேடிக்கையுடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.ஸ்ரீ நாராயண தீர்த்த மகாசுவாமிகள் தீபத்தை ஏற்றி வைத்தார். விழாவில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் மாதாஜி ரோகிணி, தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாள்முழுவதும் அன்னதானம் நடந்தது .

விழாவில் மனித உரிமைகள் கழக பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன், சென்னை ஜெகத் ராம்ஜி, முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், பாஜக விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் ராஜேஷ், திட்டக்குடி ராஜன், அரசு வக்கீல் சுந்தரராஜன், டாக்டர் ராஜா சிதம்பரம், வக்கீல் சீனிவாச மூர்த்தி ,ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர், எளம்பலூரை சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!