Kavulpalaiyam villagers roadblock to protest the opening of the wine shops
பெரம்பலூர் அரியலூர் சாலையில், கவுள்பாளைத்தில் புதிதாக மதுபானக்கடையை அரசு திறப்பதை கண்டித்து, அப்பகுதியில் இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நகரில் மொத்தம் 8 டாஸ்மாக் மதுபானக்கடைகளும், அதனுடன் இணைந்து மதுஅருந்தும் கூடங்களும் இயங்கி வந்தன. இதுதவிர அனுமதிபெற்ற 4 தனியார் மதுஅருந்தும் கூடங்களும் இயங்கி வந்தது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500மீ தூரத்திற்குள் இயங்கிவரும் அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் மதுஅருந்தும் கூடங்களை உடனே அகற்ற உத்திரவிட்டது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் நகரில் அனைத்து அரசு மதுபானக்கடைகளும், ஒரு தனியார் மதுஅருந்தும் கூடமும் இழுத்து மூடப்பட்டது.
இந்தநிலையில் பெரம்பலூர் புறநகர் பகுதியான அரியலூர் சாலையில், , கவுள்பாளையம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனிடையை அருமடல் பிரிவு சாலைபகுதியிலும், கவுள்பாளையும் குடியிருப்பு பகுதிகளிலும் டாஸ்மாக் நிறுவனம் இடங்களை வாடகைக்கு எடுத்து அங்கு அரசு 3 மதுபானக்கடைகளை திறக்க வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதை அறிந்த அப்பகுதியி குடியிருப்புவாசிகள், கிராமக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் மதுபானக்கடையை அமைத்தால் பெண்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று திரும்பும் மாணவிகளும், பெண்களும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும், இப்பகுதி ஏற்கனவே, அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி என்தால் மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியறுத்தியும், இன்று காலை சுமார்10 மணிஅளவில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பெரம்பலூர்- அரியலூர் சாலைக்கு திரண்டு வந்து கற்களை சாலையில் வைத்து தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.
ஒன்றரை மணிநேரம் நடந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலூர் அரியலூர் வழிச்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், வருவாய்த் துறையினர், டாஸ்மாக் நிறுவனத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி இங்கு மதுபானக்கடை அமைக்கமாட்டோம், என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்தனர்.