KMDK E.R.Eswaran denounced the central government without hiring petrol and diesel prices
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவனத் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை :
பெட்ரோல், டீசல் விலையை நாளுக்குநாள் பைசா கணக்கில் உயர்த்தி வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒப்படைத்த நாள் முதல் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த விலை உயர்வு அன்றாட பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையை அதிகரித்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்ததால் தான் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது என்று சொல்வதை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஏனென்றால் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தாமல் வேடிக்கை பார்த்தது ஏன் ?.
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட கலால் மற்றும் வாட் வரிகளை குறைக்காமல் மத்திய, மாநில அரசுகள் வரிகளின் மூலம் வருவாயை மட்டும் எதிர்நோக்குவது கவலையளிக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவிலிருக்கும் குக்கிராம குடும்பங்கள் வரை எதிரொலிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை உடனடியாக குறைக்க முன்வர வேண்டும்.