Heeler Bhaskar’s case should be withdrawn and released: KMDK General Secretary E.R. Eswaran
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை :
கைது செய்யப்பட்டிருகின்ற ஹீலர் பாஸ்கர் ஒரு சமூக விரோதி அல்ல, தீவிரவாதி அல்ல, யாருக்கு எதிராகவும் போராடியவரும் அல்ல, கருத்து தெரிவித்தவரும் அல்ல.
தமிழகத்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மறுபடியும் மக்கள் இடத்தில் ஞாபகப்படுத்தி அதனுடைய பலன்களை எடுத்துரைத்தார். அதற்கான விஞ்ஞான விளக்கத்தையும் மருத்துவ தீர்வுகளையும் மக்களிடத்திலே சுயலாபமின்றி பரப்பி கொண்டிருந்தவர்.
குறிப்பாக எந்தவொரு வியாதியாக இருந்தாலும் மருந்துகளை உட்கொண்டு தீர்வு காண்பதற்கு பதிலாக வாழ்க்கை முறையை மாற்றி அதன் மூலம் தீர்வை காண முயற்சிக்க வழிகாட்டியவர். எந்தவொரு மருந்திற்கும் பதிலாக என்னுடைய மருந்தை சாப்பிடுங்கள் என்று எந்த பிரச்சாரமும் செய்யாதவர்.
குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டுமானால் “நொறுங்க திண்றால் நூறு வயது” என்ற நம் முன்னோர்கள் சொல்லிய பழமொழியை காரணகாரியங்களோடு விளக்கி காட்டி பயனை எடுத்து சொன்னவர். எந்தவொரு உணவை உட்கொண்டாலும் ஒரு அரைமணிநேரம் நன்றாக மென்று சாப்பிட வேண்டுமென்றும், அதனால் உமிழ்நீர் அதிகமாக சுரந்து வெகுசீக்கிரம் உண்ட உணவு ஜீரணிக்கும் என்பதை எடுத்து சொல்லி கொண்டிருந்தவர்.
இதுபோல பல விஷயங்களை புரிய வைத்தும், இயற்கை முறையில் தாம் தினசரி உபயோகிக்கின்ற உணவு பொருட்களை எப்படி உபயோகித்தால் நோயின்றி வாழலாம் என்று சொல்லி கொடுத்து கொண்டிருந்தவர். அவருடைய அறிவுரைகளில் நோய் வராமல் தடுப்பதற்கான கருத்துகள் தான் அதிகமாக மேலோங்கி நிற்கும்.
எந்த மருத்துவமனையிலும் மருத்துவர்களிடத்தில் சிகிச்சைக்கு சென்றாலும் வந்த நோய்க்கு தான் சிகிச்சை அளிப்பார்கள். அதற்கான மருந்துகளை அளிப்பார்கள். நோய் வராமல் தடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கமாட்டார்கள்.
தொன்றுதொட்டு நம்மிடையே இருந்த பழக்கவழக்கங்களை தொடர்ந்திருந்தால் இன்றைக்கு நம்மை பாதித்து கொண்டிருக்கின்ற நோய்களும் வந்திருக்காது. மருத்துவர்களும் தேவைப்பட்டிருக்காது. இவ்வளவு மருத்துவமனைகளும் உருவாகியிருக்காது.
எந்த இடத்திலும் ஆபத்து காலங்களில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று சொன்னதில்லை. நோய் வராமல் இருப்பதற்கான தற்காப்பு பழக்கவழக்கங்களை தான் சொல்லி கொடுத்தார்.
பல்லாயிரக்கணக்கான பேர் அவருடைய அறிவுரைகளை கேட்டு பயன்பெற்று கொண்டிருக்கிறார்கள். எந்தவித கட்டணமும் இல்லாமல் அவருடைய பிரச்சார ஆடியோக்களை யார் வேண்டுமானாலும் கேட்கலாம். இது தொடர்ந்து இன்றைய தலைமுறை பழக்கவழக்கங்களை, உணவு உட்கொள்ளும் முறையை செம்மைப்படுத்தி கொண்டால் நோய்வாய்ப்படுகின்ற வாய்ப்புகள் குறையும்.
மருந்து விற்பனையும் இதனால் குறையலாம். ஹீலர் பாஸ்கர் உடைய மக்கள் நல பிரச்சாரங்களை கேட்டு புரிந்துகொண்டு தமிழக காவல்துறை அவர் மீது போட்டிருக்கின்ற வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
இதுபோன்ற மக்களுக்கு பயனளிக்கின்ற நல்ல விஷயங்களை சொல்ல வருபவர்களை தடுக்கின்ற முயற்சிகளாக இதை பார்க்கின்றோம். சரியான விசாரணைகள் இல்லாமல் தவறான நோக்கத்தோடு திரு.ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுவதை தமிழக உளவுத்துறை கவனிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.