Kottarai Reservoir Canal Cane : Allocated 5.28 acres of land owner accepted in 5 villages || கொட்டரை நீர்த்தேக்க கிளைக் கால்வாய் : 5 கிராமங்களில் 33.28 ஏக்கர் நிலம் கிரயம் செய்ய பட்டாதாரர்கள் அனுமதி
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தின் அருகே மருதையாற்றின் குறுக்கே ரூ.67.50 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தற்போது 42 சதவீதப்பணிகள் முடிவுற்றுள்ளது. இதன்மூலம் 4,194 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதிபெறும்.
தற்போது இந்த நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு கிளை கால்வாய் அமைத்திட நிலம் கையகப்படுத்தும் வகையில் கொட்டரை, ஆதனூர் (தெற்கு), சாத்தனூர், கூத்தூர் மற்றும் கூடலூர் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த நில உரிமையாளர்களிடம் நேரடி பேச்சு வார்த்தை மூலம் நிலக்கிரயம் செய்ய சம்மதம் பெறுவதற்கான கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் நிலக்கிரயம் பெறவுள்ள நிலங்களின் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பைவிட 2.5 மடங்கு கூடுதலாக வழங்க கொட்டரை, ஆதனூர் (தெற்கு), சாத்தனூர், கூத்தூர் மற்றும் கூடலூர் ஆகிய 5 கிராமங்களைச் சேர்ந்த நில உரிமையாளர்களிடன் சம்மதத்துடன் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) துரை, மருதையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், ஆலத்தூர் வட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் சம்மந்தப்பட்ட கிராமங்களின் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலவலர்கள் கலந்து கொண்டனர்.