தரக்குறைவாக பேசும் மேலாளரை கண்டித்து வங்கியை இழுத்து பூட்டி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஐஓபி வங்கி கிளையில் கோவில்பாளையம், தேனூர், வேட்டக்குடி, குழுமூர், குடிக்காடு, காடூர், நல்லறிக்கை, சொக்கநாதபுரம், கொத்தவாசல் உட்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 2500க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கணக்கு வைத்து வரவு செலவு பரிமாற்றம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களை மேலாளர் பாபுபாலு என்பவர் தரக்குறைவான வார்த்தைகளால் ஒருமையில் பேசி வருவதோடு கடந்த சில நாட்களாக இணையத்தள சேவை பாதிப்பால் வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அழைக்கழிக்கப்படுவதாகவும், இதுகுறித்து கேட்டால் சரியான பதில் அளிக்காமல் தகாத வார்த்தையில் மேலாளர் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டி துங்கபுரம் ஐ.ஓ.பி வங்கியை இழுத்து பூட்டி மேலாளர் உள்ளிட்ட பணியாளர்களை 5க்கும் மேற்ப்பட்டோரை சிறை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட முன்னோடி வங்கியான ஐஓபி வங்கி முதன்மை மேலாளர் அருள்தாசன், மற்றும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வரும் காலங்களில் இதுபோன்ற நிலை நீடித்திடாமல் பார்த்து கொள்வதாக உறுதியளித்து வங்கிக்கு பொது மக்களால் போடப்பட்ட பூட்டை திறந்து மேலாளர் பாபு பாலு மற்றும் பணியாளர்களை விடுவித்தனர். பொது மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.