கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் லெப்பைக்குடிகாட்டில் வீடு, வீடாகச்சென்று வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த துண்டுப் பிரசுரங்களை மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தேவிகாராணி வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற லெப்பைக்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில், வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்திடும் நோக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அப்பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று
நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு, “நம்மை நாமே ஆளுகின்ற ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது நம் அனைவரின் உரிமையும், கடமையுமாகும்.
சட்டத்திற்கு உட்பட்டு சாதி, மதம், இனம், மற்றும் மொழி வேறுபாடுகளை களைந்து நேர்மையுடன் வாக்களிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம்” என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாகச் சென்றனர்.