Legal awareness camp near Perambalur on the occasion of Human Rights Day!
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்ட சட்டபணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் அக்குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவருமாகிய எஸ்.பி. பர்வதராஜ் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
வேப்பந்தட்டை வட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வட்ட சட்ட பணிகள் குழு ஆரம்பிக்கப்பட்டு முதல் முறையாக சட்ட பணிகள் குழுவின் சட்ட விழிப்புணர்வு முகாம் அன்னமங்கலம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை பெருமை கொள்கிறேன். மேலும் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் சட்ட பணிகள் குழுவின் சட்ட விழப்புணர்வு முகாமிற்கு பெரும் திரளாக கலந்து கொண்ட பொது மக்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.
மனித உரிமைகளை பொறுத்த வரைக்கும், ஒருவர் உரிமைகளை மற்றவர்கள் அபகரிக்கக் கூடாது என்று நினைப்பதை போல நாமும் மற்றவர்கள் உரிமைகளை பாதுகாத்து சமூக நல்லிணக்கத்திற்கும் மற்ற எல்லா மனிதனும் மனிதனும் சமமாக மேலோங்கி இருப்பது தான் சமமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
உரிமையியல் சட்டம் குறித்து பேசும் போது தனிப்பட்ட நபர்களின் செயல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படும் வரையில் அது உரிமையியலாக பாதுகாக்கப்படுகிறது என்றும் சட்டத்தால் மீறப்படும் போது அது தண்டிக்கப்படுகின்ற குற்றங்களாக வரையறுக்கப்படுகின்றன. குற்றங்கள் சிவில் சார்ந்த குற்றங்கள் அல்லது வருமான வரி சார்ந்த தண்ட தீர்வு மட்டுமே விதிக்கின்ற குற்றங்கள் விதிக்கப்படுகின்ற போது அரசுக்கு எதிரான குற்றங்களாக வரையறுக்கப்படுகின்றன.
பொதுமக்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏற்படும் அடிதடி பிரச்சனைகள் ஏற்பட்டால் அது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு அணுகும் போது உங்களுக்குள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழக்கறிஞர் உதவி தேவைப்பட்டால் சட்ட உதவி மையத்தை நாடலாம்.
சொத்து பிரச்சனை, கணவன் மனைவிக்குள் ஏற்படும் குடும்ப பிரச்சனைகளை சமரசமாக பேசி முடிப்பதற்கும் சட்ட உதவி மையத்தில் மனு அளித்து சமரசமாக பேசி முடிக்கலாம் என்றும், கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் கோரியும் மற்றும் அடிதடி பிரச்சனையில் சிறையில் இருப்பவர்களுக்கு பிணையில் எடுக்க வழக்கறிஞர் உதவி கோரி எந்த வித முத்திரை தாள் இல்லாமல் வெள்ளை தாளில் மனு எழுதி சட்ட உதவி மையத்தில் அளித்தால் அவர்களுக்கு இலவசமாக வழக்கறிஞர் நியமனம் செய்யப்படும் என்றும் மாணவர்கள் வங்கிகளில் கல்வி கடன் பெற்று இருந்தால அதை கட்ட இயலாத நிலையில் இருந்தால் சட்ட பணிகள் குழுவினை நாடி மனு அளித்தால் மனுதாரரையும் வங்கிக்கு அறிவிப்பு அனுப்பி வரவழைத்து சட்ட பணிகள் குழு மூலம் பேசி தீர்வு காணப்படும் என்பதை எடுத்துரைத்தார்.
மேலும் சட்ட பணிகள் பாதுகாப்பு மைய மூத்த வழக்கறிஞர் சிராஜீதின் குடும்ப நல வழக்குகள் குறித்தும், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குறித்தும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்றும் எடுத்து உரைத்தார்.
முகாமில் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மருதாம்பாள் செல்வகுமார் மற்றும் செயலாளர் பாலுசாமி கலந்து கொண்டனர். மேலும் வட்ட சட்ட பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் (பொறுப்பு) கலைவாணன் முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் செய்து இருந்தார்.
முன்னதாக மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தன்னார்வலர் இமானுவேல் ராஜ்குமார் வரவேற்றார். தன்னார்வலர் முருகன் நன்றி கூறினார்.