Let us celebrate the pollution-free Bogi festival; Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
அறுவடை திருநாளை தமிழர்கள் பொங்கல் திருநாளாக தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். தைப்பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக “பழையன கழிதலும் புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம்”. இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும் தங்கள் வசம் உள்ள செயற்கை பொருட்களான டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளை எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனர்.
இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின், ப்யூரான் மற்றும் நச்சுத்துகள்கள் ஆகியவற்றால் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசுபடுகிறது. மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவைகளில் எரிச்சலும் ஏற்படுகிறது. ஆஸ்துமா மூச்சுத்திணறல் மற்றும் இதர உடல்நல கேடுகளும் ஏற்படுகிறது. பார்க்கும் திறன் குறைபடுகிறது. இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு (15)-ன் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, போகிப்பண்டிகை அன்று டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களை கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகி திருநாளை மாசு இல்லாமலும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும் மக்களின் உடல்நலத்தையும் பாதுகாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.