Loan assistance to minorities through TAMCO : Perambalur Collector notification
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்தாவது:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம்1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும் கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம்1-ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-மும் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10%, பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும், சிறுபான்மையின மாணவ,மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8%, மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரை கல்விக் கடன் உதவி வழங்கப்படுகிறது.
கடன் மனுக்களுடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெரும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கிக் கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது / செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் மேற்காணும் திட்டங்களின்கீழ் பயன்பெற விரும்பினால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.