Loan through Backward Classes Economic Development Corporation: Perambalur Collector V. Santha
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள் செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின், கடன் திட்டத்தினை சிறப்புற செயல்படுத்திடவும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்திடவும், பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் ரூ.2, லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.00 இலட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது.
ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம்.
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். கறவைமாடுகள்(2) வாங்க ரூ.60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும்.
மேற்படி திட்டங்கள் மூலம் கடன் உதவி பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். சுயஉதவி குழு தொடங்கி 6மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மேற்படி கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.