Local Business, Damage to Production: Online Walmart to Avoid! PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் வணிக நிறுவனமான பிலிப்கார்ட்டின் 77% பங்குகளை அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் ரூ. 1.10 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளது. வியக்க வைக்கும் வணிகமாக இது தோன்றினாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். இந்திய வணிகர்களை பாதிக்கும் இந்த வணிக ஒப்பந்தத்தை மத்திய அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது.

பிலிப்கார்ட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமாக இருந்தாலும் கூட அது தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை லாபம் ஈட்ட முடியவில்லை. மாறாக, இதுவரை ரூ.24,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக பெருமளவில் தள்ளுபடி கொடுத்தது தான். இப்படிப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை, அந்த நிறுவனமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பணத்தைக் கொட்டிக் கொடுத்து வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருப்பதை அறியாமையின் அடையாளமாகவோ, முட்டாள் தனமாகவோ பார்க்க முடியாது. மாறாக, 125 கோடி நுகர்வோரைக் கொண்ட இந்திய சந்தையை வளைப்பதற்காக செய்யப்படும் முதற்கட்ட முதலீடாகத் தான் பார்க்க வேண்டும். பிலிப்கார்ட் நிறுவனத்தை தளமாக பயன்படுத்திக் கொண்டு, நுகர்வோருக்கு கூடுதலான தள்ளுபடிகளை வழங்கி தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும்; அதன்பிறகு ஒட்டுமொத்த சந்தையையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது தான் வால்மார்ட்டின் திட்டம்.

வால்மார்ட்டின் வணிக அணுகுமுறை இந்திய நலனுக்கு எதிரானது என்பது தான் கவலையளிக்கும் விஷயமாகும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் கிளைபரப்பியுள்ள வால்மார்ட் சீனத் தயாரிப்புகளை அதிக அளவில் கொள்முதல் செய்து குறைந்தவிலையில் விற்பனை செய்வதை அதன் வணிகத் தந்திரமாகக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஆன்லைன் வணிகத்திலும் அதே உத்தியையைத் தான் வால்மார்ட் நிறுவனம் கடைபிடிக்கும் என்பதால், இந்தியா முழுவதும் சீனாவின் மலிவு விலைத் தயாரிப்புகள் குவிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே சீனத் தயாரிப்புகளின் வரவால் இந்திய சந்தை குப்பையாகிக் கிடக்கிறது. வால்மார்ட் நிறுவனத்தின் வரவு இந்தியாவை சீனக் கழிவுகளின் கிடங்காக்கி விடும். இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏற்கனவே, அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் இந்தியாவில் நுழைந்து ஆன்லைன் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீன நிறுவனமான அலிபாபாவும் பிக் பேஸ்கட் என்ற வணிகப் பெயரில் இந்திய சந்தைக்குள் நுழைந்து வாடிக்கையாளர்களை வளைக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூன்றுமே வெளிநாடுகளை சேர்ந்தவையாக இருப்பதும், அவற்றின் முக்கியக் கொள்முதல் சந்தையாக சீனா இருப்பதும் இந்தியாவுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல.

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது, ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த கொள்முதலில் 30% பொருட்கள் இந்தியாவில் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆன்லைன் வணிகத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் பன்னாட்டு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் சீனப் பொருட்களை விருப்பம் போல வாங்கி விற்பனை செய்யும். இதனால் இந்திய உற்பத்தி நிறுவனங்கள் நலிவடையும். அதைத் தொடர்ந்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.

இந்தியாவின் ஒட்டுமொத்த சில்லறை வணிகத்தில் 3% மட்டும் தான் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இதை அமெரிக்காவுக்கு இணையாக 20% ஆக அதிகரிக்க இந்நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன. இந்த அளவுக்கு ஆன்லைன் வணிகம் அதிகரித்தால், தமிழகத்திலுள்ள 21 லட்சம் சில்லறை வணிகர்கள் உட்பட கோடிக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். இது நாட்டின் கிராமப்பொருளாதாரத்தை முற்றிலுமாக சிதைத்து விடும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

எனவே, வால்மார்ட் போன்ற பன்னாட்டு வணிக நிறுவனங்கள் கொல்லைப்புற வழியாக இந்தியாவில் நுழைவதை தடுத்து நிறுத்த வேண்டும். அது சட்டப்படி சாத்தியமில்லை என்றால் அந்நிறுவனங்களுக்கு கடுமையான வணிக மற்றும் கொள்முதல் கட்டுப்பாடுகளை விதித்து, அவற்றால் இந்திய வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!