Local sand is a unit of Rs 1,330, foreign sand Rs9990! Sandy Larry Federation request to provide low prices

நாமக்கல்: தமிழகத்தில் உள்ளூர் மணல் ஒரு யூனிட் ரூ.1330க்கு விற்பனை செய்யும்போது இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஒரு யூனிட் ரூ.10 ஆயிரத்து விற்பனை செய்வதை தமிழக அரசு கைவிட்டு, குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராஜாமணி கூறியதாவது:

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் உத்தரவின்பேரில் தமிழகத்தில் ஏற்கனவே அரசுக்கு சொந்தமாக இருந்த 100க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் கடும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமானத் தொழில் முடங்கியுள்ளது, தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு தேவையான தரமான மணலை தமிழக அரசே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம் என்று கோர்ட் அனுமயளித்துள்ளது. கடந்த 8 மாதம் முன்பு புதுக்கேட்டையைச் சேர்ந்த தனியார் ஒருவர் 50 ஆயிரம் டன் மணலை மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதி செய்தார். அதை அவர் விற்பனை செய்ய முயற்சித்தபோது அந்த மணலில் சிலிக்கான அளவு அதிகமாக உள்ளதால் அது கட்டுமானத்திற்கு ஏற்றதல்ல என்று தமிழக அரசு தடை செய்தது. இதையொட்டி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.2050 வீதம் விலை கொடுத்து வாங்கி தமிழக அரசின் பொதுப்பணித்துறையே விற்பனை செய்யலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையொட்டி தமிழக அரசு தற்போது இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கும், கடந்த 8 மாதங்களாக அதை தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்திருந்ததற்கான டெமரேஜ் கட்டணம் போன்றவற்றை செலுத்தி இன்டர்நெட் மூலம் ஒரு யூனிட் ரூ.9990 வீதம் விற்பனையை துவக்கியுள்ளது.

ஒரு யூனிட்டு ரூ.10 ஆயிரம் விலை கொடுத்து தூத்துக்குடியில் மணலை வாங்கி லாரி வாடகை கொடுத்து கோவை, சேலம், சென்னை போன்ற நகரங்களுக்கு எடுத்துச்சென்றால் ஒரு யூனிட்டின் விலை ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஆகும். ஒரு லோடு மணலின் விலை ரூ.1 லட்சம் ஆகும்.

எனவே பொதுமக்கள் இறக்குமதி மணலை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும், இறக்குமதி மணலை இன்டர்நெட் மூலம் புக்கிங் செய்யாத லாரிகளுக்கும் வழங்கினால், அரசியல்வாதிகள் அதிகாரத்தின் மூலம் மணலைப் பெற்று கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள்.

தற்போது தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் குமரிபாளையத்தில் ஒரு அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு மணல் ஒரு யூனிட் ரூ.1330க்கு இன்டர்நெட் பதிவு அடிப்படையில் பொதுப்பணித்துறை மூலம் நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் மணல் ஒரு யூனிட் ரூ.1330க்கு விற்பனை செய்யும் தமிழக அரசு ஏற்கனவே சிலிக்கான் அதிமகமாக இருப்பதாக தடை செய்த வெளிநாட்டு மணலை வாங்கி ஒரு யூனிட் ரூ.9990க்கு விற்பனை செய்வது நியாயமற்ற முறையில் உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் கோர்ட் வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதிய மணல் குவாரிகளை திறந்து நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும். அல்லது இடைத்தரகர்கள் ஏதுமின்றி வெளிநாடுகளில் இருந்து தரமான மணலை நேரடியாக இறக்குமதி செய்து பொதுப்பணித்துறை மூலம் இன்டெர்நெட் பதிவு அடிப்படையில் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், மணலுக்கான தரத்தை மட்டுமே அரசு பரிசோதனை செய்து, இறக்குமதி செய்ய தனியாருக்கு லைசென்ஸ் வழங்கினால் அவர்கள் போட்டி அடிப்படையில் குறைந்த விலைக்கு மணலை விற்பனை செய்ய முன்வருவார்கள்.

இதன்மூலம் பொதுமக்களுக்கும், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் குறைந்த விலையில் மணல் கிடைக்கச் செய்ய முடியும். பொதுப்பணித்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் மணல் தட்டுப்பாட்டை தீர்த்து குறைந்த விலையில் மணல் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!