Manjapai Awareness Marathon Run in Perambalur: Collector Karpagam kicks off!
தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பையின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் க.கற்பகம், காலை இன்று பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்தும் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான ” மீண்டும் மஞ்சப்பை ” இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வரை செல்லக்கூடிய மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் தடகள வீரர் வீராங்கனைகள் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கும் ஒலிபெருக்கி வாயிலாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தீமைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்கள், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு முறையே ரூ.5000,ரூ.3,000 மற்றும் ரூ.2,000 ம், 4ஆம் இடம் முதல் 10ஆம் இடம் பிடித்த இருபாலருக்கும் தலா ரூ.500ம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.