Maravanattham Kallar Rs 8 crore in the new Check dam: MLAs participation in Poomi pooja

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மறவநத்தம் க்ராமத்தில் செல்லும் கல்லாற்றின் குறுக்கே தமிழக அரசு அறிவிப்பின் பேரில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.8 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய அணைக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா (ஜெயலலிதா) வழி நடக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று சின்னமுட்லு அணைக்கட்டு அமைப்பதற்கு முதற்கட்டமாக ஆய்வு செய்வதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

இதன்மூலம் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கை நிறைவேற உள்ளது. மேலும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நீர் ஆதாரத்தை பெருக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக பொதுப்பணித்துறையின் சார்பில் வேப்பந்தட்டை வட்டம், மறவநத்தம் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே ரூ.8 கோடி மதிப்பீட்டில் 125 மீட்டர் நீளத்துடன் 1.16 மீட்டர் உயரத்துடன் தடுப்பணை கட்டப்படவுள்ளது.

இதன்மூலம் அயன் பேரையூர் ஏரியில் பாசனப் பரப்பில் 93 ஏக்கரும், இதுவரை பாசன வசதி அளிக்க இயலாத 98 ஏக்கரும், பாசன வசதி பெறும் வகையில் இந்த தடுப்பணை அமைய உள்ளது. மேலும், இத்திட்டத்தின் வாயிலாக அயன் பேரையூர் கண்மாயின் கீழ் 176 ஏக்கருக்கு கூடுதல் பாசன பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏரியின் மொத்த பதிவு செய்யப்பட்ட பாசன பரப்பான 105 ஏக்கர் இத்திட்டத்தின் வாயிலாக பாசன வசதி பெறும். இத்திட்டத்தின்படி புதிய அணைக்கட்டிலிருந்து 900 மீட்டர் புதியதாக வாய்க்கால் அமைத்து ஏற்கனவே உள்ள பழைய வாய்க்காலுடன் சேர்க்கப்படுகிறது.

இந்த அணைக்கட்டு கட்டப்படுவதன் வாயிலாக சுமார் 100 கிணறுகள், 280 ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். எனவே இத்திட்டத்தின் வாயிலாக மொத்தம் 472.8 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன்வாயிலாக விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்பதில் ஐயமில்லை, என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!