Married lovers seeking protection in Perambalur asylum at the police station
திருமணம் செய்து கொண்ட காதலர்கள், பாதுகாப்பு கோரி பெரம்பலூர் அருகே காவல் நிலையத்தில் தஞ்சம்
பெரம்பலூர் அருகே பாதுகாப்பு கோரி காதல் திருமணம் செய்த தம்பதியினர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன், இவரது மகன் ராம்மோகன் (வயது 20), இவர் தனது பெற்றோர் மறைவுக்கு பின்னர், பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி அருகே உள்ள வீரமநல்லூரில் தனது பாட்டியுடன் தங்கி பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
இதே கல்லூரியில், வீரமநல்லூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் அனுஷ்யா (20) பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராம்மோகனும், அனுஷ்யாவும் ஒரே பேருந்தில் பயணம் செய்ததில் இருவருக்குமிடையே நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
இதனைடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த ராம்மோகனும், அனுஷ்யாவும் தங்களின் காதலை வீட்டில் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளனர்.
ராம்மோகன் – அனுஷ்யா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், கடந்த 13ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய ராம்குமாரும், அனுஷ்யாவும் பொன்பரப்பியிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு வெளியூரில் தங்கிருந்தனர்.
இதனிடையே அனுஷ்யாவை அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.
இதனால், பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதியினரான ராம்மோகனும் அனுஷ்யாவும் இன்று மதியம் குன்னம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர் பாதுகாப்பு கொடுத்து விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த தகவறிந்த இருதரப்பை சேர்ந்த உறவினர்கள் ஏராளமானோர் காவல் நிலையம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பினரையும் அழைத்து பேசிய குன்னம் காவல் நிலையத்தினர், காதல் தம்பதியினர் திருமண வயதை எட்டியதால் சட்டப்படி அவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது காவல் துறையின் கடமை என விளக்கமளித்து அவர்களுக்கு உங்களால் எவ்வித இடையூறும் ஏற்படாது என உறுதி பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்ட காதலர்களை ஒன்றாக அனுப்பி வைத்தனர்.