Marxist Party demonstrated against price rise at Perambalur
விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குகு உறுப்பினர் நிர்வாகி செல்லதுரை தலைமை வகித்தார். வட்ட செயலாளர்கள் வேல்முருகன் ( பெரம்பலூர் ), தங்கராஜீ (வேப்பந்தட்டை) முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு நிர்வாகி வீரபத்திரன் சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் மீதான எக்சைஸ் வரியை குறைத்திட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கிட வேண்டும். குடும்பத்திற்கு தலா 35 கிலோ தரமான அரிசி, கோதுமை வழங்கிட வேண்டும்.
விவசாயிகளையும், பொது மக்களையும் ஒருசேர பாதிக்கும் உணவு தானிய முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மையங்களுக்கு உரிய நிதி வழங்கிட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
வேலை நியமன தடை உத்தரவை விலக்கி கொள்ளதோடு அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
தனியார் துறையில் இடஒதுக்கீட்டை செயல்படுத்த சட்டம் இயற்ற வேண்டும். அரச சலுகை பெறும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக்கல்லூரி, சின்னமுட்லு அணை, மருதையாறு நீர்த்தேக்கம், அரசு வேளாண்மை கல்லூரி, ஜவுளிப்பூங்கா உள்ளிட்ட திட்டங்களை உடனடியான செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி பேசி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், கலையரசி மற்றும் நிர்வாகிகள் அகஸ்டின், கணேசன், கிருஷ்ணசாமி, முத்துசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.