Medical assessment camp for differently abled in Perambalur!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை கலெக்டர் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களின் சமூகப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு வட்டாட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட பெயர் பட்டியலின் அடிப்படையில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு (பெரம்பலூர்-13, வேப்பந்தட்டை-24, ஆலத்துார்- 06, குன்னம்-15) வயது வரம்பை தளர்த்திடும் வகையில், மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது. காது,மூக்கு,தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் என பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
5 பயனாளிகளுக்கு தலா ரூ.2,950 மதிப்பீட்டில் காதொலி கருவியினையும், 1 பயனாளிக்கு ரூ.7,900 மதிப்பீட்டில் சக்கர நாற்கலியும் என மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.22,650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.
காதொலி கருவி வேண்டி 5 நபர்களும், சக்கரல நாற்காலி வேண்டி கோரிக்கை மனுவை வழங்கியதை தொடர்ந்து, மனு கொடுத்த அனைவருக்கும் அடுத்த 10 நிமிடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், மருத்துவர்கள் அறிவழகன் (எலும்பியல் சிறப்பு), சிவக்குமார் (காது, மூக்கு, தொண்டை சிறப்பு) அசோக் (மனநல சிறப்பு), பிரவீன் பாபு (கண் மருத்துவர்), கமலக்கண்ணன் (குழந்தைகள் நலம்) உள்பட வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்