Met in Bangkok: UN climate conference: Can the world save from destruction?
ஐநா காலநிலை மாநாடு தற்போது பாங்காக்கில் உள்ள ஐநா ஆசிய-பசிபிக் அரங்கில் தொடங்கியுள்ளது (UN Climate Change Conference, Bangkok).
இது மிக முக்கியமான கூட்டம் ஆகும். செப்டம்பர் 4 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தான் – உலகம் அழியாமல் காப்பற்ற முடியுமா? முடியாதா? என்பதை முடிவு செய்யும்!
காலநிலை மாற்றம் என்றால் என்ன?
பூமியின் வளிமண்டலம் இயற்கையாகவே சூரிய வெப்பத்தை கணிசமான அளவு பிடித்து வைக்கிறது. அதனால் தான் பூமியில் உயிரினங்கள் வாழ உகந்த தட்பவெப்பம் நிலவுகிறது. இவ்வாறு, வெப்பத்தை தக்கவைக்கும் பூமியின் ஆற்றலுக்கு வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களே (Greenhouse gases) காரணம் ஆகும்.
மனிதர்கள் கடந்த 150 வருடங்களாக நிலத்தில் புதைந்திருக்கும் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவின் அளவு அதிகரித்து விட்டது.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு 277 ppm (1 ppm என்பது பத்து லட்சத்தில் 1 பகுதி) அளவாக இருந்த வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தி, தற்போது 406 ppm அளவை கடந்துவிட்டது. இதனால், பூமியின் சராசரி வெப்பநிலையில் 1 டிகிரி செல்சியல் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய ஆபத்து ஆகும்.
புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாகவே பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் – என பல தீங்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது!
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் – மிகப்பெரிய இயற்கை சீற்றங்களை சந்திப்போம். அதுவே 2 டிகிரி செல்சியல் அளவை கடந்துவிட்டால், சமாளிக்கவே முடியாத பேரழிவுகளை எதிர்க்கொள்ள வேண்டும். அதன் தொடர்ச்சியாக மனித இனமே முற்றிலும் அழிந்துபோகும் நிலை ஏற்படும்.
அதாவது, காலநிலை மாற்றத்தை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால், இப்போதைய தலைமுறையினர் மிகப்பெரிய பேரழிவுகளை சந்திப்பார்கள். இனி வரும் ஓரிரு தலைமுறையில் உலகில் மனிதர்கள் வாழவே முடியாத சூழல் ஏற்படும். அதன் தொடர்ச்சியாக மனித வாழ்க்கை அழியும். இதுதான் காலநிலை மாற்றம் குறித்த ஐநா மாநாடுகளின் பின்னணி ஆகும்!
இன்னும் எவ்வளவு கால அவகாசம் உள்ளது?
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த இனியும் கால அவகாசம் இல்லை. அந்த வாய்ப்பை உலகம் தவறவிட்டிருக்கலாம் என்பதே அறிவியலாளர்களின் முடிவாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை ஐநா அவை வரும் அக்டோபர் மாதம் வெளியிடவுள்ளது.
அதாவது, மிகப்பெரிய வரலாறு காணாத இயற்கை சீற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை உலக நாடுகள் தவறவிட்டிருக்கலாம் என்பதே இன்றைய நிலை. கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு 1990-களிலும் 2009 ஆம் ஆண்டிலும் இருந்தது. ஆனால், அமெரிக்க நாடு அந்த நல்வாய்ப்புகளை அழித்துவிட்டது.
இனி 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்குள் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் இரண்டாவது வாய்ப்புதான் இருக்கிறது. இதற்கும் 2020 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அளவு மென்மேலும் அதிகரிப்பதை நிறுத்தி, அதனை படிப்படியாக குறைத்து, சுமார் 20 ஆண்டுகளில் ‘பூஜ்ய’ அளவினை எட்ட வேண்டும்.
அதாவது – நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு இல்லாத உலகத்தை இன்னும் சுமார் இருபது ஆண்டுகளுக்குள் உருவாக்கியாக வேண்டும். இதற்கான ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்காகத்தான் ஐநா காலநிலை மாநாடுகள் கூட்டப்படுகின்றன.
பாங்காக் ஐநா காலநிலை மாநாட்டில் நடப்பது என்ன?
ஐநா காலநிலை மாநாடுகளின் ஒரு முக்கிய மைல் கல்லாக, 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (Paris Climate Agreement.) எட்டப்பட்டது. இதன்படி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெகு கீழாக குறைப்பது என்றும், 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது என்றும், இதற்காக உலகின் அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து முயற்சிப்பது என்றும் உலகின் 180 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன (பின்னர் அமெரிக்கா மட்டும் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறிவிட்டது).
பாரிஸ் காலநிலை உடன்படிக்கை 2020 முதல் செயல்பாட்டுக்கு வர வேண்டும். 2018 ஆம் ஆண்டிற்குள் இதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க வேண்டும் என்பது ஐநா விதிமுறை ஆகும்.
குறிப்பாக, உலக நாடுகள் அனைத்தும் கரியமியல வாயு அளவை போதுமான அளவு குறைக்க செய்வது எப்படி, அவ்வாறு குறைப்பதை உறுதி செய்வது எப்படி, அதனை கண்காணிப்பது எப்படி, நிதி உதவிகளை எவ்வாறு அதிகரிப்பது, அவற்றை எவ்வாறு செலவிடுவது – என அனைத்துவிதமான விதிமுறைகளையும் (Paris Rulebook) வரும் டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் நடைபெறவுள்ள ஐநா காலநிலை மாநாட்டில் முடிவுசெய்து, உலக நாடுகள் அனைத்தும் ஏற்க வேண்டும். அப்படியான ஒரு விதிமுறையை உருவாக்கும் இடமாக பாங்காக் காலநிலை மாநாடு உள்ளது.
இந்த மாநாடு வெற்றி பெற்றால், வரும் டிசம்பர் மாதம் போலந்தில் கூடும் ஐநா காலநிலை மாநாட்டில் Paris Rulebook உலக நாடுகளால் ஏற்கப்படும். அதன் பின்னர் 2020 முதல் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வரும். உலகம் அழியாமல் தடுக்க ஓரளவு வாய்ப்பும் கிடைக்கும்.
அதாவது, இயற்கை பேரிடர்களை இனி ஓரளவுக்கு மேல் கட்டுக்குள் வைக்க முடியாது. ஆனால், உலகில் மனித இனமே இல்லாமல் போவதை தடுக்க முயற்சிக்கலாம் என்பதே இப்போதைய நிலை!
பாங்காக் ஐநா காலநிலை மாநாடு வெற்றிபெறுமா என்பது இன்றைய நிலையில், சந்தேகத்துக்கு உரிய கேள்விதான்!
தகவல் :
– இர. அருள்,
மாநிலச் செயலாளர், பசுமைத் தாயகம்