MGR Century Festival: Intimidating colleges to send vehicles? PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

எந்த வழி வந்த வழியோ, அந்த வழி தான் செல்லும் வழியாகவும் இருக்கும் என்பதைப் போன்று குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்தவர்கள் அனைத்தையும் குறுக்கு வழியில் தான் செய்வர் போலிருக்கிறது. சென்னையில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு ஆள் திரட்டுவதற்காக ஆட்சியாளர்கள் செய்யும் உருட்டல், மிரட்டல் வேலைகள் அதை உறுதி செய்துள்ளன.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நாளை மறுநாள் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பும், கோபமும் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் நாற்காலிகள் மட்டுமே பார்வையாளர்களாக பங்கேற்றன.

சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவுக்காகாவது கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்களை சென்னைக்கு அழைத்து வருவதற்காக அங்குள்ள தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் அவற்றின் வாகனங்களை தர வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

சில கல்லூரிகள் அவற்றின் மாணவர்களையும் சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இதை மதித்து மாணவர்கள் மற்றும் வாகனங்களை அனுப்பி வைக்காத கல்வி நிறுவனங்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயரதிகாரிகள் நேரடியாகவே எச்சரித்திருக்கின்றனர். வாகனங்களுக்கான எரிபொருளையும் கல்வி நிறுவனங்களே நிரப்பித் தர வேண்டும்; இல்லாவிட்டால் கல்வி நிறுவன வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தனிப்பட்ட முறையில் தமது பலத்தையும் காட்ட வேண்டிய கட்டாயம் முதலமைச்சருக்கு இருப்பதால், தமது சொந்த மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் ஆட்களை அழைத்து வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் சேலம் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களை சென்னை விழாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மாணவர்களின் படிப்பை கடுமையாக பாதிக்கும். இதைக்கூட உணராமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மாணவர்களை அனுப்ப கட்டாயப்படுத்துவதிலிருந்தே, மாணவர்களின் நலனிலும், கல்வி வளர்ச்சியிலும் தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதை உணர முடியும்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே, விழாக்களுக்கு கூட்டம் சேர்க்க மாணவர்களை அழைத்துச் செல்வது தான் வாடிக்கையாகவுள்ளது. இதற்கு பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எம்.ஜி.ஆர் விழாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு தடை விதித்தது. ஆனால், அதற்குப் பிறகும் சாதாரண உடைகளில் மாணவர்களை அழைத்துச் செல்வதை ஆட்சியாளர்கள் வாடிக்கையாக்கி விட்டனர். உள்ளூர் அளவில் அரங்கேற்றப்பட்டு வந்த இந்த அத்துமீறல், இப்போது சென்னை விழாவுக்கு மாணவர்களையும், வாகனங்களையும் கட்டாயப்படுத்தி அழைத்து வரும் அளவுக்கு நீண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதால் தமிழக மக்களுக்கு 10 பைசாவுக்குக் கூட பயன் இல்லை. அரசியலில் முகவரியை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கும் பினாமிகளுக்கு அடையாளம் வேண்டும் என்பதற்காகத் தான் எம்.ஜி.ஆரின் 102-ஆவது ஆண்டில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டதோ, அங்கெல்லாம் மக்களுக்கு தொல்லைகளும், நெருக்கடிகளும் தான் பரிசாகக் கிடைத்தன. 30.08.2017 அன்று வண்டலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் சரிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி கல்லூரியின் திடல் சிதைக்கப்பட்டது. இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, கோவையில் விதிகளை மீறி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி சாலையில் சாய்ந்த ரகு என்ற மாணவர் பின்னால் வந்த வாகனம் மோதி உயிரிழந்தார். இவ்வளவு இழப்புகளுடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட வேண்டுமா? என்பது தான் வினா.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானவர்களில் பெரும்பான்மையானோர் அடக்கத்துடன் ஆட்சி செய்திருக்கின்றனர். ஆனால், அதிர்ஷ்டத்தில் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அன் கோவின் ஆட்டம் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்களின் ஆட்டத்திற்கு விரைவில் நீதிமன்றம் முடிவு கட்டும்; தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இது உறுதி, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!