Minister Sivasankar launches new route from Thanjavur to Salem via Kolkatham
பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் வழியாக தஞ்சாவூரில் இருந்து, அரியலூர், துறையூர், நாமக்கல் புதிய வழித்தடத்தில் சேலத்திற்கு பேருந்து ஒன்றை, குன்னம் தொகுதி எம்.எல்.ஏவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கொளக்காநத்தம் கிராமத்தில் தொடங்கி வைத்தார். அப்போது, திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றிய செயலாளரும், சேர்மனுமான என்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கொளக்காநத்தம், அயினாபுரம், அனைப்பாடி ஆகிய கிராமங்களுக்கு 110/22KV புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து 22KV காரை மின் பாதையில் நேரடியாக தடையில்லா மின்சாரம் கிடைக்க சுமார் 5.64 கி.மீ தொலைவில் புதிய மின் இணைப்பு பாதை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்குறிச்சி துணைமின் நிலையத்தில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் கம்பிவடம் அமைக்கப்பட்டு, இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. மழைக்காலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து பழுது ஏற்படுவதாலும், குறைந்த மின் அழுத்தத்தால் அடிக்கடி மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டதாலும் பொதுமக்களின் நலன்கருதி தற்போது புதுக்குறிச்சி துணைமின் நிலையத்தில் இருந்து நேரடியாக கம்பிவடம் அமைத்து, அயினாபுரத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொளக்காநத்தம், அயினாபுரம், அனைப்பாடி ஆகிய மின்பகிர்மானங்களில் உள்ள 1,559 மின் நுகர்வோர்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொளக்காநத்தம் ஊராட்சியில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.48 இலட்சம் மதப்பீட்டில் கட்டு கட்டும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வக அறை, 2 மருத்துவர் அறைகள், மருந்தக அறை, மருந்து கிடங்கு அறை, தொற்றா நோய் பிரிவு அறை, 4 கழிவறைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய புதிய கட்டிடம் அமைக்க கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் கொளக்காநத்தம் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அவசர மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை குறைக்கப்பட்டு, தங்களது சொந்த ஊராட்சியிலேயே நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.