Minister Sivasankar provided Rs. 16.08 lakhs worth of government welfare assistance to unorganized workers.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ எம்.பிரபாகரன் முன்னிலையில் 900 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆபிசில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக அனுதினமும், திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். திட்டங்களின் பயன்கள், பொதுமக்களை நேரடியாக சென்றடையும் வண்ணம், தொடர்ந்து துறை ரீதியான அமைச்சர்கள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடத்தி திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். கடந்த காலங்களில் வழங்கப்படாமல் இருந்த நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேரிடர் காலத்தில் தங்களது பொருளாதார இழப்பினை சரிசெய்யும் பொருட்டு, 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தினை ஏற்படுத்தி தேர்தல் காலங்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, அதற்கென தனித் துறையினை ஏற்படுத்தி அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து அரசின் நலத்திட்ட உதவிகள் எவ்வித தேக்கமும், காலதாமதமும் இன்றி உடனுக்குடன் பொதுமக்களை சென்றடைகிறது.
இனிவரும் காலங்களில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்கள் நமது மாவட்டத்திற்கு உடனுக்குடன் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல அலுவலகத்தில் 48,854 நபர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 900 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. பதிவு செய்யப்பட்ட 900 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.16.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இதில் 2 நபர்களுக்கு திருமண உதவித் தொகையாக தலா ரூ.5,000- வீதம் இரண்டு நபர்களுக்கு ரூ.10,000-மும், கல்வி உதவித்தொகையாக 167 நபர்களுக்கு ரூ.4.03 லட்சமும், விபத்து மரண உதவித்தொகையாக 4 நபர்களுக்கு ரூ.4.2 லட்சமும், இயற்கை மரண உதவித் தொகையாக ரூ.50,000-மும், ஓய்வூதிய உதவித் தொகையாக 725 நபர்களுக்கு ரூ.7.25 லட்சமும் என மொத்தம் 900 நபர்களுக்கு ரூ.16.08 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் சம்மந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என அப்போது தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான சி.ராஜேந்திரன், கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் எம். பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்டம், தொழிலாளர் உதவி ஆணையாளர் ஜெ.எ.முஹம்மது யூசுப், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் சேர்மன் மீனா அண்ணாதுரை, பெரம்பலூர் மாவட்ட துணைச்சேர்மன் முத்தமிழ்செல்வி , வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.