Minister SS Sivasankar inaugurated a collection of 14 types of groceries Collection and corona Relif fund Rs. 2000 at Perambalur, Kunnam.

பெரம்பலூர் மற்றும் குன்னத்தில், தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை தொகுப்பையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழச்சி கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் முன்னிலையில் வகித்தனர்.

அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட பதவி ஏற்ற நாளிலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகிறார். தேவையான இடங்களில் தேவையானவற்றை செய்வதற்காக வெறும் வாய்ச்சொல் அல்லாமல் செயல் வீரராக சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தேவையானவற்றை உடனுக்குடன் போர்க்கால அடிப்படையில் செய்து தர உத்தரவிட்டு வருகிறார். கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்திற்குச் சென்று அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகளுக்கு கவச உடை அணிந்து நேரடியாக நோயாளிகளிடம் சென்று அவா;களது குறைகளை கேட்டறிந்து, அதனை நிவா;த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதேபோல் விலங்குகள் மீதும் அக்கறை கொண்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் நேரடியாக களத்திற்குச் சென்று பேட்டரி வாகனத்தின் மூலம் பயணித்து விலங்குகளை பார்வையிட்டு, அவைகளை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொண்டார். இதன் மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் முன்மாதிரியாக களப்பணி ஆற்றி வருகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திட அல்லும் பகலும் அயராது கடினமாக உழைத்ததன் காரணமாக கொரோனா வைரஸ் சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் மற்றும் படுக்கைகள் போன்ற மருத்துவ உபகரணங்களின் தேவை படிப்படியாக குறைக்கப்பட்டு, பொதுமக்கள் மருத்துவ வசதி பெறுவதற்கான அனைத்து வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் துன்பங்களை போக்குவதற்கு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் பணியினை 10.05.2021 அன்று துவக்கி வைத்தார். அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,82,412 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு ரூ.36.48 கோடி (99.3 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவா;களின் பிறந்த நாளை முன்னிட்டு, இரண்டாம் தவணையாக ரூ.2,000 வழங்கும் பணியினையும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, அரை கிலோ சர்க்கரை, 500 கிராம் உளுந்தம் பருப்பு, 250 கிராம் புளி, 250 கிராம் கடலைப் பருப்பு, 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய்த் தூள், 200 கிராம் டீத்தூள், குளியல் சோப்பு மற்றும் துணி துவைக்கும் சோப்பு ஆகிய 14 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பினையும் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 282 நியாய விலைக் கடைகளின் மூலம் மளிகை தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளனர். நமது மாவட்டத்தில் உள்ள 1,84,693 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் வட்டத்தில் 49,759 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், வேப்பந்தட்டை வட்டத்தில் 49,172 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், குன்னம் வட்டத்தில் 49,884 குடும்ப அட்டைதாரர்கள், ஆலத்தூர் வட்டத்தில் 35,878 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 1,84,693 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கடந்த 11.06.2021 முதல் 14.06.2021 வரை ஆகிய 4 நாட்களில் நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண உதவித் தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தமிழக முதலமைச்சரின் அறிவுரையினை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தும், அடிக்கடி கைகளை சோப்பு திரவம் கொண்டு சுத்தம் செய்து கொண்டும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் தேவைக் கேற்ப படிப்படியாக ஊரடங்கினை தளர்த்தி வருகிறார்கள். அதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அனைவரின் கடமையும், பொறுப்பும் ஆகும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் த.செல்வகுமரன், துணை பதிவாளர்கள் கே.கே.செல்வராஜ், ந.பாண்டிதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், குன்னம் ஊராட்சித் தலைவர் தனலெட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஏ.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, தி.மதியகழன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் திரளாக சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!