பெரம்பலூர் : மானாவாரி விவசாயத்தில் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி பயிர்கள் ஆகியவற்றில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயித்திற்கான இயக்கம் (Mission on sustainable Dryland Agriculture) என்ற சிறப்புத் திட்டம் தமிழகம் முழுவதும் 2016-17-ம் ஆண்டு தொடங்கி 2019-20 முடிய நான்கு ஆண்டுகளில் ரூ.802.9 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, 1000 எக்டர் மானாவாரி சாகுபடி நிலங்கள் ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகளிலிருந்து தொகுப்பாக தேர்வு செய்யப்பட்டு, முதலாண்டில் 200 தொகுப்புகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 400 தொகுப்புகளிலும் ஆக மொத்தம் 1000 தொகுப்புகளில் மொத்தம் 25 இலட்சம் ஏக்கரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நடப்பாண்டில் 25 மாவட்டங்களில் 200 தொகுப்புகள் உருவாக்கப்பட்டு தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு குழுக்களின் முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல் தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும்.
இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 5 இலட்சம் ஏக்கருக்கு, உழவு மானியம் வழங்கப்படும். மேலும் தானியம் மற்றும் சிறுதானிய பயிர்கள் 2 இலட்சத்து 15 ஆயிரம் ஏக்கரிலும், பயறு வகை 2 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கரிலும், எண்ணெய்வித்துக்கள் 42 ஆயிரத்து 500 ஏக்கரிலும், பருத்தி 30 ஆயிரம் ஏக்கரிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக விதை மற்றும் உயிர் உரங்கள் 50 சதம் மானிய விலையில் வழங்கப்படும். மேலும் மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளிட்டவை அரசு நிதி உதவியுடன் வழங்கப்படும்.
படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு இயந்திர வாடகை மையம் 80 சதம் மானியத்தில் வழங்கப்படும். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிக்களுக்காக நிதியுதவி வழங்கப்படும்.
மானாவாரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி இன்றியமையாதது. எனவே, மாநில அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-17ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 6 தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் வட்டாரத்தில் கல்பாடி, ஆலத்தூர் வட்டாரத்தில் கொளக்காநத்தம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் பசும்பலூர் மற்றும் வெண்பாவூர், வேப்பூர் வட்டாரத்தில் வேப்பூர் மற்றும் மருவத்தூர் ஆகிய கிராமங்களில் இந்த தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தொகுப்பிலும் தலா ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் வீதம் மொத்தம் 6000 ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் 1600 ஹெக்டேர் பரப்பில் மானாவாரி பருத்தியிலும், 4400 ஹெக்டேர் பரப்பில் மானாவாரி மக்காச் சோளத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 165.24 லட்சம் ஆகும். இதனால் 8316 விவசாயிகள் பயனடைய உள்ளனர். இவ்வாறு வேளாண்மை இணை இயக்குநர் சுதர்சன் தெரிவித்துள்ளார்.