MLAs Vasantham Karthikeyan, Udayasuriyan are guards for, Illegal liquor dealers?! An investigation should be conducted against the lying Kallakurichi Collector; FIR lodged with false information: CBI to investigate case; PMK Ramadoss!

மாதிரி படம்- பழையது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச் சாராய வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளை காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாக கருதமுடியாது. ஆட்சியாளர்களின் ஆதரவுடன், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்களாக பணியாற்றும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வரை அனைவரின் ஆதரவும் கள்ளச்சாராய வணிகர்களுக்கு இருந்திருக்கிறது. இந்த அளவுக்கு வலிமையான பின்னணி கொண்டவர்களின் துணையுடன் நடந்த கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணை எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் தொடங்கி, நேர்மையான திசையில் பயணிக்க வேண்டும். ஆனால், முதல் தகவல் அறிக்கையே நீதியை படுகொலை செய்துள்ளது.

கள்ளச்சாராய சாவுகளின் களமாக இருந்த கருணாபுரம் என்ற பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ள கருணாபுரத்தில் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய அலுவலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. மது குடிக்க வருபவர்கள் அனைவரும் இந்த அலுவலகங்களைக் கடந்து தான் செல்ல வேண்டும்; குடித்து விட்டு இந்த அலுவலகங்கள் வழியாகத் தான் திரும்ப வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியவற்றுக்கு நன்கு தெரிந்தே தான் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இது குறித்து தான் முதலில் விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்தையும் மறைத்து விட்டு, கருணாபுரம் சுடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக அப்பட்டமான பொய்யுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது விசாரணையின் அடிப்படையையே தகர்த்து விடும்.

கள்ளச்சாராய சாவுகள் குறித்த செய்திகள் முதன் முதலில் வெளியான போது, உயிரிழப்புகளுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் தொடர்பே இல்லை என்றும், வயிற்றுப்போக்கால் தான் அவர்கள் இறந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறினார். உயிரிழந்த எவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பொய்களை அடுக்கினார். உயிரிழப்புகள் அதிகரித்த பிறகு தான் அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டார்.

கள்ளச்சாராய சாவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறியது ஏன்? அவ்வாறு கூற அவரை கட்டாயப்படுத்தியது யார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். அதற்காக ஜடாவத்திடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்; அவரை இந்த வழக்கின் சாட்சியாக சேர்க்க வேண்டும். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, அங்கேயே தங்கியிருக்க ஆணையிட்ட அரசு, ஆட்சியர் ஜடாவத்தை மட்டும் பணியிட மாற்றம் செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது. கள்ளச்சாராய சாவு விசாரணையில் இந்த முதல் கோணல் முற்றும் கோணலாகவே முடியும்.

ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் என்பவர், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மீது செலுத்திய ஆதிக்கம் குறித்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மாவட்ட ஆட்சியராக எவர் வந்தாலும், அதிகாலையில் கார்த்திகேயன் விளையாடும் இடத்திற்கு சென்று, அவர் விளையாடி முடிக்கும் வரை காத்திருந்து வணக்கம் செலுத்தி விட்டு வந்து தான் வழக்கமான பணிகளைத் தொடங்க முடியும் என்பது எழுதப் படாத விதி என்று கூறப்படுகிறது.

காவல்துறை உள்ளிட்ட எந்த துறை அதிகாரியாக இருந்தாலும் வசந்தம் கார்த்திகேயனுக்கு வணக்கம் செலுத்தத் தவறினால் அவர் இடமாற்றம் செய்யப்படுவது கட்டாயமாம். அவரது ஆதரவு சாராய வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் பலரும் பந்தாடப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முதல்வராகவே செயல்பட்டு வந்த வசந்தம் கார்த்திகேயனும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனும் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய வணிகர்களின் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு மூல காரணமானவர்கள் என்று பல தரப்பாலும் குற்றஞ்சாட்டப்படும் இந்த இருவரும், கள்ளச்சாராய சாவுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுடனும், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடனும் இணைந்து கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது துணை கண்காணிப்பாளர் நிலையிலுள்ள சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் அவர்களை எவ்வாறு விசாரிக்க முடியும். தமிழக காவல்துறை அதிகாரிகளால், அதிகாரம் பெற்ற இவர்களின் அருகில் கூட நெருங்க முடியாது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும், என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!