பெரம்பலூர் மாவட்டம் பொதுத்தேர்வு கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது
அரசுப்பொதுத் தேர்வுகளை சிறப்பான முறையில் நடத்திடவும், எந்தவித ஒழுங்கீணங்களும் நடைபெறாமல் மிகுந்த கவனத்துடன் நடத்திடவும் பொதுத் தேர்வு கண்காணிப்புக்குழு உள்ளது. இதன் தலைவராக மாவட்ட ஆட்சியர், உப தலைவராக முதன்மைக்கல்வி அலுவலரும் உள்ளனர்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், ஊர்க் காவல் படைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தலைமையிடத்து மாவட்ட கல்வி அலுவலர் அமைப்பாளராகவும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சிறப்பாக நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த பொதுத்தேர்வு கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 4 அன்று துவங்கி ஏப்.1- அன்று முடிவடைவதாகவும், 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 15.3.2016 அன்று துவங்கி 13.4.2016 அன்று முடிவடைவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த அரசுப் பொதுத் தேர்வுகளில் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் 24 மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வை 8,792 பேர் எழுத உள்ளனர். இதில் மாணவர்கள் 4,418 பேர், மாணவிகள் 4,374 பேர் ஆவர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 32 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை 9,637 பேர் எழுத உள்ளனர். இதில் மாணவர்கள் 5,124 பேர், மாணவிகள் 4,513 பேர் ஆவர்.
எனவே, இந்த அரசுப் பொதுத் தேர்வுகளை எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருக்கவேண்டும்.
தேர்வு மையங்களுக்கு சென்று வர ஏதுவாக அந்தந்த வழித்தடங்களில் போதிய பேருந்து வசதிகள் செய்யப்பட வேண்டும். வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் பாதுகாப்பாக கொண்டுவர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேலும், எந்தவித தொய்வும் இன்றி, பாதுகாப்பான முறையிலும், சிறப்பான வகையிலும் அரசுப் பொதுத்தேர்வுகளை நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.
என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் கணேசன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் மற்றும் காவல்துறை, போக்கு வரத்து துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.