Mother dies after being admitted for delivery at a private hospital for fear of corona: Relatives roadblock with newborn baby!

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கோகிலா (வயது 20), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று ஏற்பட்ட திடீர் பிரசவ வயிற்று வலியின் காரணமாக கரோனாவிற்கு பயந்து, அரசு மருத்துவமனைக்கு செல்லாமல், பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார், அவருக்கு இன்று அதிகாலை 1.15 மணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நலமாக இருந்த கோகிலா அதிகாலை 3 மணியளவில் திடீரென அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கோகிலாவை சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம், பெண்ணின் உறவினர் அனுமதியின்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. .

அங்கு கோகிலாவை பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த கோகிலாவின் குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் கோகிலாவின் உயிரிழப்பிற்கு தனியார் மருத்துவமனை மருத்துவர்களே காரணம் என குற்றம் சாட்டி பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் இடையே போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கோகிலாவின் குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதோடு, புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். கோகிலாவின் கணவர் சிவா கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்து உடற்கூறு ஆய்வு நடத்தி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!