Must provide quality education: Perambalur Collector Karpakam instructs in school management committee meeting!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அரசு / அரசு ஆதிதிராவிடர் நல உயர்/ மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்கள், தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் என 300 க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த என்னென்ன முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பெற சுற்றுப்புற சூழலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுப்புற சூழல் சரியாகவும், சுகாதாரமாகவும் இல்லாமல் இருந்தால் கல்வி கற்பதற்கு ஏற்ற நிலை இருக்காது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தல், பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் கட்டடப்பணிகளான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கழிவறைகள், பழுது நீக்கப் பணிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சாய்தளம் அமைத்தல் போன்ற பணிகள் பள்ளிகளில் நடைபெறுவதை பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வேறு ஏதேனும் தேவைகள் இருந்தாலும் அந்தந்த தலைமை ஆசிரியர்களிடம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெரிவிக்கலாம்.
மேலும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத விழுக்காடு தேர்ச்சியினை உறுதி செய்யவும், பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்க்கவும், மற்றும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான உதவி உபகரணங்கள் மற்றும் தரமான கல்வியை வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி குழந்தைகள் நடந்து செல்வதற்கும் இடையூறு இல்லாத வகையிலும், விஷ ஜந்துக்கள் ஏதும் தங்காமல் இருக்கும் வகையிலும் பள்ளி கட்டிடக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளி கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் மிக விரைவில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்