Mysterious fever near Perambalur; One More Fatal: Death Toll Rises to 2; Public fear!


பெரம்பலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்ததால், பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தில் உள்ள ராயப்பா நகரில் வசித்து வந்த முத்துசாமி மகன் கார்த்திக் (34), என்ற வாலிபர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக கடந்த 8ஆம் தேதி திருச்சி கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.

இந்நிலையில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்த ராமர் மனைவி கீதாமணி(31), சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்து விட்டார்.

இதனால் வி. களத்தூரில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வி.களத்தூர் கிராம மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

வெள்ளாற்றில் உள்ள போர்வெல்லில் கழிவு நீர் கலப்பதாலேயே ஊருக்குள் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிற நிலையில், பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான பதட்டம் நிலவி வருகிறது.

இதனை கவனத்தில் கொண்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் ராயப்பா நகருக்கு நேற்று முன்தினம் நேரில் சென்று பொது மக்களிடம் கலந்துரையாடி அடிப்படை தேவைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!